Monday, November 05, 2007

ரமணரிடம் சில கேள்விகள்

முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷியை சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?
ரமணர்: சாத்வீக உணவு - அதுவும் குறைந்த அளவில்.
பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?
ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை...
பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)
பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?
ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!
பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?
ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?
பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.
ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால் மனமும் பாதிக்கப்படுகிறது.
பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.
ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.
பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது.
பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?
ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.
பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?
ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!
பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?
ரமணர்: அதுவே வழி.

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!