Tuesday, October 23, 2007

இந்து இறை நம்பிக்கை ஒன்பது

இந்து சமய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மாளாது என்றாலும், பொதுவான மற்றும் முக்கியமான ஒன்பது நம்பிக்கைகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

1. எங்கெங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.

2. வேதங்களிலும் ஏனைய மறைகளிலும், ஆகமங்களிலும் இறை உண்மை உறைக்கப்பட்டிருக்கிறது.

3. அண்ட சராசரங்களும், அதிலுள்ள எல்லாமும் 'ஆக்கம் - வாழ்வு - இறப்பு' என்னும் முடிவில்லா சுழலில் தொடர்கின்றன.

4. ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர்.

5. இறப்பிற்குப்பின் ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறப்பு எடுத்து பிறவிச்சுழலில் தொடரும். ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

6. உருவ வழிபாடு, சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தங்கள் கண்ணுக்கு தெரியாத உலகங்களில் இருக்கும் இறைஅம்சங்களுடன் தொடர்பு கொள்வதாக நம்புகிறார்கள்.

7. சத்குரு ஒருவரின் வழிநடத்தும் துணையுடன் நல்லொழுக்கம், நன்நடத்தை, யாத்திரை, சுய-வினவல், தியானம் மற்றும் இறைவனுக்கு தன்னை முழுதும் அர்பணித்தல் போன்றவற்றால் எங்கும் நிறைந்த பிரம்மமான இறைவனை அறியலாம்.

8. எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

9. இந்து சமயத்தினைப் போலவே, மற்ற சமயங்களிலும் இறைவனை அடைவதற்கான உண்மையான வழிகளும் உண்டு.

Sunday, October 14, 2007

கர்மா, மறுபிறவி

இந்து சமயத்தில் கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றால்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5


கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ 'ஊழ்வினை' என்ற சொல்லை கையாள்கிறார்.


இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.


ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

குறிப்பு: இப்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்து மீள்விக்கப்பட்டது.