Sunday, June 21, 2020

கள்வரோ நீர்?

ன்னவெல்லாம் தோன்றும் எம்பெருமான் மேனியிலே என்றெடுத்துச் சொல்வார் திருநாவுக்கரசர் பெருமான் இந்த திருப்பூவணம் பதிகத்தின் முதல் பாடலில்:
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
 		- வாசீகப் பெருமான் நாவுக்கரசர்

முழு பதிகத்தினையும் இங்கு பார்க்கலாம்.

சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி அவர்கள் இப்பாடலுக்கும் இன்னும் சில பாடல்களுக்கும் சிவகாமி நாட்டியம் ஆடுவதாகக் கதை அமைத்து, கதையோடு சேர்த்து கண்ணுதற் கடவுளைக் கருத்தில் நிறைத்திடும் கனிவான திருநாவுகவுக்கரசர் தேவாரப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இச்சில பாடல்களைப் படித்தாலே இன்னபிற இனிப்பினையும் தேடிப் படிப்பாரெனச் சொல்லவும் வேண்டுமோ!. இப்பாடல்கள் வரும் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலுக்குள் செல்வோம்.

~~~~~~~~ முப்பத்தைந்தாம் அத்தியாயம் : கள்வரோ நீர்? ~~~~~~~~~~~~~

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின்,

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்"

என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள்.

பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்:

வெள்ளநீர்ச் சடையனார் தாம்

வினவுவார் போலவந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க்கு

உறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக்

கலந்துதான் நோக்கிநக்கு

வெள்ளரோம் என்று நின்றார்

விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு,

"ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள்.

அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்;

அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார்.

வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வெளியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வெளியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள்.

Friday, June 12, 2020

நாலும் இரண்டும்

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
- நாலடியார்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்

இந் நாலும் இரண்டும் தரும் நல்வழி தனைப் பாடிடப் புனைந்த பாடல்.

எடுப்பு
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும் - உலகில்
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும்.

தொடுப்பு
நாலும் இரண்டும் கற்றோர்க்கு - பொல்லா
உலகில் இல்லையே பவ பயம்.

முடிப்பு
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
வேலை முடிந்து கோரைப்பாயிற் படுத்தாலும்
நாலும் இரண்டும் தரும் நல்வழிதனைப் பற்றிட
(உலகில் இல்லையே பவ பயம்)

பாலை நிலத்தில் நீர் அதனைத் தேடி
மூலை முடிக்கெங்கும் அலைந்து திரியாமல்
கள்ளிச் செடியிலும் காண்பாரே.
(நாலும் இரண்டும் கற்றோர்க்கு)

காலை மாலை என வேளை எதுவாகிலும்
ஆலும் வேலும் போல் நாலும் இரண்டும் என
நூலைக் கற்று வழி நடந்தார்க்கு
(உலகில் இல்லையே பவ பயம்)