ஆறாம் திருமுறையில் இருபத்தி ஓராம் பதிகத்தில் வள்ளலார் சுவாமிகள் சுத்த சன்மார்க்க வேண்டுகோளை இறைவனிடம் சமர்பிக்கின்றார். இதில் 11 பாடல்கள் உள்ளன.
21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
1. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப்பிரியாத நிலமையும் வேண்டுவேனே.
இந்த முதல் பாடலை சஞ்சய் சுப்ரமண்யன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்
இராகம்: பூர்விகல்யாணி
மேற்கண்ட பாடலில் ஐயனை அப்பா என்றழைத்த வள்ளலார், அடுத்த பாடல்களில் ஐயா/ அண்ணா / அம்மா என்றும் அழைக்கிறார்.
மூன்றாவது பாடலில் பண்ணார உன்னைப் பாடுதல் வேண்டும் எங்கிறார். பாடுதலும், பாடலைப் படித்தலும் இறைவனை அடைவதற்கான கருவிகள் ஆதலினால்.
நாலாம் பாடலில் இறந்தாரையும் மீட்டு அவர்களையும் இறைவனை இகத்தில் உணரச் செய்திட வேண்டும் என்றியம்பினார்.
ஆறாவது பாடலில் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் - எனும் ஐந்தொழிலையும் நான் புரிதல் வேண்டும் எனும் கோரிக்கையை விடுக்கிறார். இவையெல்லாம் இறைவனின் தொழிலாக இருக்க, மனிதரால் முடியுமோ? அப்படி இறைவனின் தொழிலைக் கவர நினைத்தோரை அரக்கர் என்றல்லவோ புராணங்கள் கூறின. இங்கே வள்ளலார் சொல்வது அத்தொழில்களை கவருவது அல்ல. இறைவனது குணங்களை இந்த பூத உடலில் ஜீவன் இருக்கும்போதே அதிலில் பரமனுடன் கலந்த இகபர நிலை. பத்தாம் பாடலில் உன்னுடன் கலந்து ஒன்றான நிலை வேண்டும் என்றார்.
ஏழாம் பாடலில் வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் இழக்கும் நிலை வேண்டும் என்றார்.
எட்டாம் பாடலில் சமய சன்மார்க்க பொதுமை பெறல் வேண்டும் எனக் கோருகிறார்.
தொடர்ந்து அடுத்த பாடல்களைப் பார்ப்போம்.
2. ஐயாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
அடிமுடி கண்டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயக நின்தனைப்பிரியா துறுதலும் வேண்டுவனே.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்ணுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண்டுவனே.
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோதியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகி உலகியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
6. அடிகேள்நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.
7. அம்மாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆதிய முழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
8. அச்சாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க்கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.
9. அறிவாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென்னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.
11. அமலாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ்சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.