அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட
அறுமுகவேளே அருள்வாயே
இகமதில் துயரது இனியேனும் வாராது
இவனுக்கினி அருள்வாயே
உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது
தலைமுதல்கால்வரை காப்பாயே
பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட
பனிமுகம் தெரிந்திட அருள்வாயே
வழிதனில் விழிவைத்து எதிர்பார்த்திடும் அன்பரது
விழிதனில் தெரிந்தே அருள்வாயே
எனதிருசெவி தனிலும் ஓம்கார நாதமெனும்
உனதொலி ஒலித்திட அருள்வாயே
நாசிவழி சுவாசம்தனை ஒருநிலைப்படுத்தி
வாசியோகம் செய்ய அருள்வோனே
பாயும் மனமதை சுழிதனில் அடக்கிடும்
மாயம் தன்னை அருள்வாயே
குணமது மூன்றும் குறையின்றி சமமாகிடும்
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா.