Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:


Monday, October 12, 2015

"உன்னை"ப் பாடும் பாடல்கள்

பாடலின்/பல்லவியின் அல்லது முதல் வரியில் "உன்னை" என்ற சொல்லுடன் வரும் கிருதிகளில் சில:

1. அறிவார் யார் உன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: பைரவி



2. அய்யனே இன்றுன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: மத்யமாவதி

3. நேக்குருகி உன்னைப் பணியா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆபோகி

4, நிஜம் உன்னை நம்பினேன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பிலஹரி

5. சுவாமி உன்னை - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆரபி

6. உன்னப்போல எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: பேஹாக்

7. உன்னைத் தவிர வேறில்லை
இயற்றியவர்: நீலகண்ட சிவன்
ராகம்: சுரடி

8. உன்னைத் துதிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: குந்தளவரளி

9. உன்னையல்லால் உற்றதுணை
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி

10. உன்னையல்லால் வேறேகதி
இயற்றியவர்: கோடீஸ்வர ஜயர்
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

11. உன்னையன்றி உற்றதுணை
இயற்றியவர்: தண்டபாணி தேசிகர்
ராகம்: பைரவி

12. உன்னையல்லால் 
இயற்றியவர்: கவி குஞ்சர பாரதி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

13. உன்னை பஜிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பேகடா

14. உன்னை எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: கல்யாணி

15. அப்பா உன்னை மறவேனே
இயற்றியவர்: பெரியாசாமித் தூரன்
ராகம்: பிலஹரி

16. உன்னை மறவாதிருக்க
இயற்றியவர்: லலிதா தாசர்
ராகம்: ஹம்சாநந்தி

17. உன்னை மறவாமல்
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: சாளகபைரவி

18. உன்னை நினைந்தே
இயற்றியவர்: முத்தையா பாகவதர்
ராகம்: இராகமாலிகை

19. உன்னை நினைந்து நினைந்து
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: சக்ரவாகம்

20. உன்னை நினைந்து உள்ளம் - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: தேவமனோகர்

21. உன்னை நினைந்தாலே
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: செஞ்ச்சுருட்டி




Monday, September 07, 2015

ஒரு காலைத் தூக்கியது ஏன்?

இயற்றியவர்: மாரிமுத்தாப்பிள்ளை
இராகம் : தோடி / விளரிப்பாலை
தாளம் : ஆதி


பல்லவி:
எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக்
கொண்டிருக்கின்ற வகை ஏதையா?

அனுபல்லவி:
பொன்னாடர் போற்றும் தில்லை
.....நன்னாடர் ஏத்தும் தில்லை
பொன்னம்பல வாணரே
.....இன்னும் தானும் ஊன்றாமல்
(எந்நேரமும் ஒரு...)

சரணம்:
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ?
....எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ?

சிக்கனவே பிடித்து சந்திரனை நிலத்தில் தேய்த்த போதிலுரைந்தோ?
....உக்கிர சாமுண்டியுடன் வாதுக்காடியசைந்தோ?

உண்ட நஞ்சு உடம்பெங்கும்
.....ஊறிக் கால் வழி வந்தோ

தக்க புலி பாம்பிரு வாக்கும் கூத்தாடியாடி
....சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர்
(எந்நேரமும் ஒரு...)

Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.



Sunday, February 22, 2015

ஆதித்தன் பெருமை

சௌரம் - ஒரு மதம் என்று சொல்லப்படும் அளவிற்கு அன்று சூரிய வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்தது. கலிங்கத்தின் கட்டிடக் கலையின் உச்சம் என சொல்லப்படும் கொனார்க் சூரிய கோவில் இன்றும் அதை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு.

இராம-இராவண யுத்தத்தின் போது, வெற்றி-தோல்வி இல்லாது முடிந்த ஒரு மாலைப் பொழுதில் அகத்திய மாமுனி இராமனை அணுகி, "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஆதித்தன் துதியை எடுத்து இயம்பினார். இத்துதியானதை ஓதுவோருக்கு மனச் சோர்வையும் நோய்களையும் போக்கி உடலுக்கு சக்தி தரும் அருமருந்தாகச் சொன்னர்.  இதனில் சூரிய பகவான் தான் - பிரம்ம தேவன்; விஷ்ணு; ருத்ரன்; சண்முகன்; பிரஜாபதி தேவன்; தேவேந்திரன்; குபேரன்; காலன்; தர்மராஜன்; சந்திரன்; வருணதேவன் - என்றெல்லாம் வர்ணனை செய்யப்படுகிறது. இப்படி எல்லாமுமான பரம்பொருள் என்பது எல்லாமும் அடங்கிய சர்குண பிரம்மம் ஆகையால் - சூரியனை வழிபடுவது என்பதை பரம்பொருளைத் துதிப்பது போலாகிறது.

யோகாசனங்களில் பெரிதும் அவசியாமான ஒன்றாக கருத்தப்படும் "சூரிய நமஸ்காரம்" - உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் அரும்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் சூரியனையும் ஒரு கிரகமாக சேர்க்கப்படுவதன் காரணம் தீமைகளை அழித்து நன்மைகளை நாட்டுவதே ஆகும்.

முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களில் - சூரியன் மற்றும் இதர கிரகங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது உருப்படிகள் செய்திருக்கிறார். இவையாவன:

சூர்ய மூர்த்தே (சௌராஷ்டிரம்)
சந்தரம் பஜ மானஸ (அசாவேரி)
அங்காரகம் (சுரடி)
புதம் ஆஸ்ரயாமி (நாட்டைகுறிஞ்சி)
பிரகஸ்பதே (அடாணா)
ஸ்ரீசுக்ரபகவந்தம் (பரஜூ)
திவாகரதனுஜம் (யதுகுலகாம்போதி)
ஸ்மராம்யகம் (ரமாமனோஹரி)
மஹாசுரம் (சாமர)

இந்த ஒன்பது கீர்த்தனைகளில் அந்தந்த கிரகங்களில் சிறப்புகளும், ஜோசிய சாஸ்திரம் தொடர்பான நுட்பங்களையும், அவற்றுக்கான மந்திரங்களின் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்ய மூர்த்தே 
இராகம் : சௌராஷ்டிரம் (சூர்யகாந்தம் ஜன்யம்)
தாளம்: த்ருவம்

பல்லவி
ஸூர்ய மூர்தே நமோऽஸ்து தே
ஸுந்த3ர சா2யாதி4பதே

அனுபல்லவி
கார்ய காரணாத்மக ஜக3த்ப்ரகாஸ1 -
ஸிம்ஹ ராஸ்1யதி4பதே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஆர்ய வினுத தேஜ:ஸ்பூ2ர்தே
ஆரோக்3யாதி3 ப2லத3 கீர்தே

சரணம்
ஸாரஸ மித்ர மித்ர பா4னோ
ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ
க்ரூர பாப ஹர க்ரு2ஸா1னோ
கு3ரு கு3ஹ மோதி3த ஸ்வபா4னோ
ஸூரி ஜனேடி3த ஸு-தி3னமணே
ஸோமாதி3 க்3ரஹ ஸி1கா2மணே
தீ4ரார்சித கர்ம ஸாக்ஷிணே
தி3வ்ய-தர ஸப்தாஸ்1வ ரதி2னே
(மத்4யம கால ஸாஹித்யம்)
ஸௌராஷ்டார்ண மந்த்ராத்மனே
ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே
பா4ரதீஸ1 ஹரி ஹராத்மனே
பு4க்தி முக்தி விதரணாத்மனே


பாடற்பொருள்
சூரிய மூர்த்தியே - சாயா தேவியின் பதியே!
எல்லா காரியங்களுக்கும் காரணமாகத் திகழ்பவனே!
உலகங்கெளெல்லாம் ஒளிகொண்டுத் திகழச்செய்பவனே!
சிம்மராசியின் அதிபதியே!
உடலக்கு அழகையும் பலத்தையும் ஆரோக்யத்தையும் கொடுப்பவனே!
தாமரையை மலரச் செய்பவனே! (இதய தாமரையையும்)
கர்ணனின் தந்தையே!
கொடிய பாவங்களையும் வதைத்து காப்பவனே!
சந்திரன் முதலான கோள்களை ஆள்பவனே!
நடக்கும் எல்லா செயல்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே!
அழகான ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவனே!
எட்டெழுத்து ஸ்வர மந்திரமாகத் திகழ்பவனே!
தங்க ஒளியாத் திகழ்பவனே!
பிரம்மா, திருமால் மற்றும் சிவன் போன்றவனே!
பொருளையும் அருளையும் ஒருசேரத் தருபவனே!

இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள், ஆதித்ய ஹிருதயத்தினை விருத்தமாகப் பாடியபின் பாடிட இங்கு கேட்கலாம்:



Saturday, January 10, 2015

விடலைப் பருவமடி!

இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

தொடுப்பு
வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது
வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது
விடலைப் பருவமடி - வெண்ணிலா
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 1
சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்
சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி
இகபரசுகம் பெறவே துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 2
விரைந்தெனைக் காண வேலவன் வருவான்
பரிவோடு என்னை பார்த்திட வருவான்
பாலகன் இவனை வாரி அணைத்து
ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

முடிப்பு
அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது
அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது
அறிந்தது யாவையும் அடியோடு மறக்க
அழகன் முருகனைக் காணத் துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!