ஓடும் கங்கை நாறும் கொன்றை
சுடாத நிலவு சூடும் பிரான்
விடாது உலையில் வாட்டி எடுத்தனன்
விடாது ஒட்டும் வினையை.
தண்டை ஒலிக்க வெண்டையம் இனிக்க
கிண்கிணி கிலுகிலுக்க சதங்கைகள் கொஞ்ச
கண்கழலில் வாணியும் சிலம்பில் பரவிந்தும்
அணியழகு சிங்கார செந்தில் வேலவன்;
பிரானின் குமாரன் உமாவின் சுதனாம்
சூரனை வேலினால் வென்ற செவ்வேள் மா
மரத்தை இரண்டாயப்் பிளந்து தன் செங்
கரத்தால் காட்டினான் அருள்.
--------------------------------------------
கந்தன் அணியும் ஆபரணங்களுக்கான மேற்கோட்கள்:
தண்டை:
சிந்திக்கில்லேன் நின்று சேவிக்கில்லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கில்லேன்
- கந்தரலங்காரம்
வெண்டையம்:
காலின் கழலோசையு நூபர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களின் ஓசைய தாநட மிடுவோனே
- திருப்புகழ்
கிண்கிணி:
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினாலுலகம் கேட்டதுவே.
- கந்தரலங்கரம்
சதங்கை:
மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
- திருப்புகழ்
தண்கழல்:
மதுரவாணியுற்ற கழலோனே
- திருப்புகழ்
சிலம்பு:
இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
- திருப்புகழ்