Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Wednesday, December 05, 2012

Life of Pi திரையில்

அண்மையில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் பகிர்ந்து கொள்வதும் பல்கிப் பெருகி வரும் தருணத்தில், எனது பார்வையையும் இங்கே பதிவு செய்கிறேன்.

புத்தக வடிவில் நாவலாக வெளியிடப்பட்டபோதே 2005இல், இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி இருந்தேன். முன்னுரை மட்டும் படித்த பின் ஒரு பதிவும் அப்போது எழுதி இருந்தேன். பின்னர் முழுதும் முடித்த பின்னர் மீண்டும் பதிவிடக் கிட்டவில்லை. என்றாலும், அப்போதைக்கு இப்போது சமன் செய்யலாமனெ நினைக்கிறேன். முடிந்த வரை, இப்பதிவில் இப்படத்தின் கதை விவரங்களைச் சொல்லாமல் இருக்கப் பார்க்கிறேன்.

3D வடிவத்தில் பெரிய படங்கள் அனைத்துமே இப்போதெல்லாம் வெளியிடப்படுகையில், எனக்கோ 3D கண்ணாடிகள் வழியாக திரையினைப் பார்ப்பது என்பது ஒரு குறையாகவே தோன்றும். அது செயற்கையான சேர்க்கையாக, என் இயற்கையான விழி வழி புலனுணர்வுகளுக்கு ஏதோ ஒரு தடையாகவே தோன்றும். ஆகவே 3D காட்சியனை தவிர்க்க நினைத்தாலும், சாதாரணக் காட்சிக்கு அனுமதிச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வேறு வழியின்றி 3D காட்சிக்கே சென்றேன். ஆனாலும், நல்லவேளை, அப்படியொன்றும் பெரிய இடராகத் தெரியவில்லை.

படத்தில் முதல் சொல்லே "கண்ணே" என்றே தமிழில் தொடங்க - வியப்பில் இது ஏற்கனவே கேட்ட குரலாய் இருக்கிறதே நினைக்கையில் - அது பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடும் தாலாட்டுப் பாட்டென்பது தெளிவாகியாது. பக்கத்தில் மடியில் உட்கார்ந்திருந்த நான்கு வயது மகளோ உடனே தூங்கிவதற்கு முகத்தை திரும்பிக் கொண்டு தயாராகி விட்டாள்!

 

நல்லவேளை, பாடல் முடிந்தபின் புதுச்சேரிக் காட்சிகளும், இயல்பான வசனங்களும் அவளைத் தொடர்ந்து தூங்க விடாமல் திரையை கவனிக்கச் செய்து விட்டன. இயக்குனர் ஆங் லீ என்பவரின் தயாரிப்பு தானா, இது ஹாலிவுட் படம்தானா என எண்ணும் அளவிற்கு புதுச்சேரிக் காட்சிகள் தமிழ் திரைமண்ணின் மணத்தைக் காட்டின!

இந்தியர்கள்் எப்படி பிற மதங்களையும் தங்கள் சூற்றுச்சூழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மற்ற மதக் கடவுள்களையும் அன்னியமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டும் காட்சியும் உண்டு. கிட்டத்தட்ட இந்தக் காட்சிகள் ஆவணப்படம் போல் இருந்தாலும், மேலை நாட்டவர்களுக்கு நமது சமயச்சூழலையும், "எம்மதமும் சம்மதம்" என்னும் கோட்பாடும் இயற்கையாகவே இளைய தலைமுறையில் உருவாகுவது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

படம் முழுவதும் படத்தின் நாயகன் தன் கதையைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தன் தந்தையின் மிருகக் காட்சி சாலை அனுபவங்கள் முதல் கால் பகுதி. மீதிப் பகுதியில் நாயகன் ஒரு சில மிருகங்களுடன் படகொன்றில் மாட்டிக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பதுதான். தனது சொந்தப்புலமதில் தனக்கு விருப்பமானவற்றைச் செய்வதும் பின்பற்றுவதுமாக எல்லோரும் போல இருந்த நாயகன், அவற்றைத் தாண்டி, கடல் என்னும் புதிய பழக்கமில்லாத புலத்தில் விடப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கலாம்? பசிபிக் பெருங்கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லா திசைகளிலும் கடலே தெரிகையில் படகில் மிஞ்சுவது தினமும் ஐந்து கிலோ மாமிசம் உண்ணும் வங்காளப் புலியும், மாமிசமே உண்டிராத நாயகனும் தான். தன்னை புலியிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள நாயகனின் சிறு சிறு முயற்சிகள் எனப் படம் நகர, அப்பயணத்தின் போது வண்ணத்திரை வண்ணத் தூரிகையாகிறது. படகையும் அதை இணைத்திருக்கு கட்டு மரத்தையும் சுற்றி பச்சை ஒளி தோன்றுவதாகவும், இரவில் கடலுக்கு ஜெல்லி மீன்களே வண்ண ஒளியூட்டுவதும், கடலில் இருந்து பிரம்மாண்டமான உயரத்திற்கு எழுந்து விஸ்வரூப தரிசனத்தைத் தரும் திமிங்கலமும் கண்கொளாக் காட்சிகள்!




கடலின் பிரம்மாண்டம் திரையில் விரிய, அதில் பகல் நேரத்தில் வானத்தின் நீலமும், வெண் மேகங்களும் தங்கள் பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. இரவு நேரமென்றால் இன்னமும் கேட்கவே வேண்டாம். கற்பனைக்கே அலாதி ஆனந்தத்தைத் தரும் கரு வானத்தில் பதித்து வைந்த எண்ணிடலங்கா இரத்தினங்களென மின்னும் விண்மீன்களின் தனித்துவமான பிரதிபலிப்பு பார்ப்பவர் விழிகளை வசியம் செய்கிறது. படகு பயணிப்பது கடலிலா அல்லது வானத்திலா என்று மனதை மயலுறுத்துகிறது!

நடுக்கடலில் மீண்டும் புயல்வர, அது படகுடன் அவர்களை ஆளிலில்லாத அதிசயத் தீவிற்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாயகன் இயற்கையாகவே சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக் கொண்டதுடன், புலியுடன் படகை செலுத்தி, இறுதியில் மெக்ஸிகோவின் கடற்கரையை அடைகிறான். புலி படகில் இருந்து இறங்கி கடலை ஒட்டி இருக்கும் காட்டில் மறைகிறது. அது காட்டில் நுழையும் சமயம் தன்னை திரும்பி ஒருமுறை கடைசியாகப் பார்க்காத என்ற ஏக்கத்துடன் மயங்கி விழுந்த நாயகனைக் காப்பாற்றி மருத்தவ மனையில் சேர்க்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

பின்னர் நாயகனைப் பார்க்க வந்த காப்புரிமை நிறுவன ஆட்களிடம் இந்தக் கதையைச் சொல்ல அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு கதையினைச் சொல்கிறான். இரண்டாவது மாற்றுக் கதையை நாயகன் சொல்லும்போது ஏனோ நான் அவற்றை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுக்கொண்டே இருந்தேன். ஏனப்படி? நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏதோ ஒன்றின் நம்பிக்கை செய்யும் வித்தையால்தான் அது. படத்தின் முக்கால் பகுதிக்கு கண்களிலும் மனதிலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அதற்கு நேரெதிர் மறையான இன்னொன்றைச் சொல்லும் போது - மனதால் ஏற்கப்பட மறுக்கப்படுகின்றன. இந்த 'மாற்று' வேண்டாமே என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இறை நம்பிக்கையும் இப்படித்தான் என்பதை மறைமுகமாக இதன் பின்புலத்தில் வைக்கப்படுவதை கவனிக்காமல் விட்டுவிட இயலாது. இரண்டு கதைகளைச் சொல்லி - எப்படி நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகையில் - இறை நம்பிக்கையோ அல்லது இறை மறுப்போ - நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ - அதைத் தான் நம்பப் போகிறீர்கள் - அதுபோலவே இந்தப் படத்தின் முடிவையும் நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ அதுபோல எடுத்துக் கொள்ளுங்கள் என்று நம்பிடமே விட்டு விடுகிறார்கள்!

புலி காட்டுக்குள் மறைவதற்கு முன்னால் தன்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற நாயகனின் ஏக்கம் போல - மனிதர்கள் வாழும்போதே ஒருவருக்கொருவர் உதவியோ நன்றியோ செய்யாமல், அவர்களை இழந்தபின் அதற்காக ஏங்குவது என்பதைப் பதிவு செய்து திரைப்படம் நிறைவு பெறுகிறது.

படம் முடிந்து மங்கிய விளக்குகளின் வெளிச்சம் அரங்கில் ஆக்கிரமிக்க, என்னுடைய உடமைகளை இறுக்கமாகவும், அதிக கவனத்துடனும் பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கினேன்!

படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இங்கே பார்க்கலாம்: