Friday, September 30, 2011

மாயா யாமா

மாயை? இச்சொல்லின் பொருள்தான் என்ன?
மாயை என்பது காட்சிப்பிழையா அல்லது கானல் நீரா?

தொடக்கக் காலத்தில் மாயை என்றால் மகேசனின் ஜாலமென்றுதான் பொருள்.
காலப்போக்கில், அப்பொருள் மறைந்து போய், மனமயக்கமே மாயை என்று பொதுவாக பொருள் கொள்ளப்பட்டது. இந்த உலகமே பொய். காண்பதெல்லாம் வெறும் மாயை என்று பொருள் சொல்லப்பட்டது. நிலையாமை என்பதுதான் மாயை என்பதாகக் கொள்ளப்பட்டது.
 
சுவேதஸ்வதர உபநிடதம் சொல்லுவதை சற்று நோக்கினால்:
"இயற்கையே மாயை என்பதறிவோம்.
மனமே மாயையின் அரசன் என்பதை அறிவோம்.
அவ்வரசனே இறைவன் என்பதறிவோம்."


கிட்டத்தட்ட  கனவில் நடப்பது போல, பாதி உறக்கத்தில், பாதி விழிப்பில் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்க, நமது புலன்களால் உணரப்படக்கூடயதை மட்டுமே உலகமாக, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவாய் நாம் கொள்வதால் - நம்மைப் பொறுத்த வரையில் பிரபஞ்சம் என்பதுஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

1. ஒரு பக்கம் மாயை என்றால் "கனவுக் காலம், வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்" என்பது போன்ற நிலையின்மையாகவும், புலன்களால் உணரப்படுவதாகவும், அதனால் மனமும் அதே மயக்கத்தில் அமிழ்ந்து போவதாகக் கொள்ளப்பட்டாலும்,

2. அதே மாயையினால்தான் எங்கெங்கும் வியாபித்து, எல்லாப் பொருளிலும் இருக்கிறான் இறைவன்.


மேலே சொல்லப்பட்ட இரண்டு கூற்றுகளும் இந்து சமயத்தின் தத்துவ அடித்தளமாகும்.
மற்ற எல்லா கூற்றுகளும் இவற்றில் இருந்து வந்தவைதான்.

-சுவாமி விவேகானந்தரின் "மாயை" பற்றிய சொற்பொழிவுகளில் இருந்து
சகோதரி நிவேதிதையின் குறிப்புகள் (The Master as I saw Him)


Monday, September 19, 2011

இலக்கும் இறுதியும்

இலக்கு தொலை தூரத்தில் இருக்கிறது.
இயற்கைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ஆனால் அது,
நம்மை எப்போதும் தன்பால் ஈர்த்தபடியே இருக்கிறது!
அதனை அருகாமையில் வரச் செய்ய வேண்டும்.
அருகே அருகே என அருகாமையில் வர வர:
வானத்தின் இறைவன் இயற்கையில் தெரிகிறான். பின்னர்,
இயற்கையில் தெரிந்த இறைவன் இயற்கையாகவே மிளிர்கிறான்.
அடுத்து, உடலாகிய கோயிலில் உறைகிறான்.
பின்னர், உடலில் உறைந்த இறைவன் உடலாகவே ஆகிறான்.
இறுதியாய் அவனே அதன் ஆன்மாவாகிறான்.
அது வரை இலக்கானது நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கெங்கெலாமோ தேடப்பட்டவன்
இங்கேயே இதயக் கமலத்திலேயே இருக்கிறான்.
தத்வமஸி. நீயே அவன், ஓ மனிதா, நீயே அவன்.

- சுவாமி விவேகானந்தர்
மேற்கோள் : சகோதரி நிவேதிதாவின் "The Master as I saw Him"

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

- மகாகவி பாரதி



Sunday, September 11, 2011

கண்ணன் விடு தூது

மிழ் இலக்கியத்தில் தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக பேசப்படும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. அகம் இது, புறம் இது என அளபெடுத்த தமிழர் அவற்றில் ஒவ்வொரு பகுதியினையும் ஆராய்ந்து அழகு படுத்தியுள்ளனர். அகம், புறம் இரண்டிலும் இடம்பெறக் கூடிய சிறப்பு தூதிற்கு உண்டு. பற்பல காப்பியங்களில் அவற்றை அலங்கரிக்கும் பாத்திரங்கள் தமக்குள்ளே ஏற்பட்ட ஊடலையோ அல்லது பிரிவையோ அல்லது சச்சரவினையோ தீர்க்கும் பொருட்டு இரு தரப்பிற்கும் பொதுவான ஒருவரையோ, அல்லது பொருளையோ, ஏன் தமிழ் மொழியைக்கூடத் தூது விட்டதுண்டு!

மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால், அக்காப்பியத்திலேயே பல தூது உண்டு என்றாலும் அவற்றில் கண்ணன் தூது சிறப்பிலும் சிறப்பு. சரி, கண்ணன் விடு தூது என்று சொல்லலாமா அல்லது கண்ணன் விடும் தூதா? மான் விடும் தூது/ மயில் விடு தூது என்றால் மானையோ மயிலையோ தூதாக அனுப்பப்பட்டதைச் சொல்லலாம். பாண்டவர்கள் சார்பில் கண்ணன் தூதனாக கௌரவர்களிடம் சென்றான் என்பதினைக் கண்ணன் விடு தூது எனலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமுதலாகக் கண்ணன் இருக்கையில் தூதனாகச் செல்வதும், செல்லச் சொல்வதும் கண்ணன் அல்லவோ! கண்ணன் அன்றி வேறில்லை.

கண்ணன் தூதுச் சருக்கத்தில், வில்லிபுத்துரார், கடவுள் வாழ்த்துப் பாடலில், பாரளந்த அண்ணலைப் பாடுகிறார்:
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் 
பிரியான் ஆகி, 
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு, 'படை எடேன் அமரில்!' 
எனப் பணித்த கோவை, 
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு 
ஆழிக் கரை கண்டாரே. 
- வில்லி பாரதம் 

கௌரவர்களிடம் இருந்து சஞ்சயன் தூதனாக வந்து போன பின்பு, தருமர் தன் தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வேண்டி திருத்துழாய் மாலை சூடும் கமலக்கண்ணனைத் தூதாக அனுப்ப எண்ணி இருந்தார். கண்ணனை அழைத்து அவரிடமும், தனது தம்பியர் நால்வரிடம் அவ்வெண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.   "கண்ணா, போர் என்று வந்தால் அனைவரும் மாள்வார். ஆகையால் போர் வேண்டாம். சமாதானம் வேண்டு. நாட்டில் எங்களது பகுதியினை வேண்டு. அதைத் தர அவர்கள் மறுத்தால் ஐந்து ஊர்கள் வேண்டு. அதையும் தர மறுத்தால், ஐந்து வீடுகளாவது வேண்டு. அதனையும் தர மறுத்தால், பின் போர் வேண்டு" என்றான் தருமன். 

தருமனது மேற்சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெஞ்சினம் கொண்டு வெதும்பிச் சொன்னான் வீமன்:

சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
                  சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
                  செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
                  வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
                  கொற்ற வேந்தே! 
 
தேவர்களும், முனிவர்களும், வேதங்களும் தேடப்பெற்ற சிறப்புடைய கண்ணனை - போயும் போயும் நமக்கு அரசு வேண்டி தூது அனுப்பலாமோ, வேண்டாம் வேந்தே, என்னத் தூதாக அனுப்பு. நான் போய் என் கதையால் கௌரவர்கள் கதையை முடித்து விட்டு வருகிறேன் என்றான். வீமனது சினத்தைக்  தணித்தபின் கண்ணன் அர்ஜூனனை நோக்கி, "விஜயா, உன் கருத்து யாது?" என வினவினான். விஜயனோ, "கண்ணா, அண்ணன் வீமனும் போக வேண்டாம், யாரும் போக வேண்டாம், இங்கிருந்தே என் காண்டீபத்தால் அவர்களைப் பொடிப்பொடி ஆக்குவேன்" என்றான். அடுத்து கண்ணன் நகுலனைக் கேட்க, "தூதினால் பயனில்லை" என்றே பெயர்ந்தனன். இறுதியாக ஐவரில் இளையவனாம் சகாதேவனது கருத்தைக் கண்ணன் கேட்டான்:

நகுலன் இவை உரைத்ததற்பின், 'நன்று!' எனக் கை
                  அமைத்தருளி, 'நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
                  யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
                  திறல் உடையோய்! புகல், நீ' என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
                  உருக, மொழிகின்றானே:

ஐவரில் ஞானி சகாதேவன் தான் போலும். சொல்லுதற்கு அரியதான மெய்யறிவை உடையவனாம் இளையோன் மொழிந்தான்: 

'சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
                  செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
                  என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
                  என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
                  தெரியுமோ?-ஆதி மூர்த்தி! 

"கண்ணா, தருமன் சொல்வதுபோல் நீயும் தூது சென்றால் என்ன? அல்லது செல்லாவிட்டால்தான் என்ன?துரியோதனன் எங்களுக்கு நிலம் தந்தால் என்ன? தராவிட்டால் என்ன? சபதமிட்ட பாஞ்சாலியும் தன் கூந்தலை முடித்தால் என்ன? முடியாமல் விரித்தால் என்ன? எந்த செய்கையும் எப்படி முடியும் என்று அறிந்தவன் நீ. எனக்கு என்ன தெரியும்? எது எப்படி நடந்தாலும் அது உன் விருப்பத்தால் விளைந்தது அல்லவோ!" என்றான்!:

'முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
                  அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
                  பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
                  அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
                  என்றான், தெய்வம் அன்னான். 

"அன்று நீ பாலகனாய் இருந்தபோதே, விடம் தடவி முலைப்பால் தந்து உனைக்கொல்ல வந்த பேய்மகளையும் அறிந்து கொண்டாய். மேலும் உரலோடு உன்னைக் கட்டி வைத்த பின்னும், அதனோடு மருது மரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்றாய். உயர்ந்து நின்ற சகடாசுரனும் நிலத்தில் விழச்செய்தாய். இடையர் மாளிகையில் வளர்ந்து இப்படியெல்லாம் இந்திரஜாலம் புரிந்த கண்ணா, நீ செய்யும் மாயை தனை இங்கு இருக்கும் ஒருவரும் அறியார். ஆனால் அதன் உட்பொருளை அடியேன் அறிவேன். உன் திருவுளத்தில் இருக்கும் கருத்தே என் கருத்தாகும். உன் சுதந்திரமே என் சுதந்திரம் ஆகும்" என்றான் கடவுளைப் போன்ற சகாதேவன்.

உடனே கண்ணன் சகாதேவனை தனியே அழைத்துச் சென்று நகைப்புடன் அவனது தந்திரமான பேச்சை மெச்சி, "சகாதேவா, நன்று உரைத்தாய். ஆனால், பாரதப் போர் நடக்காமல் இருக்க நீயே ஒரு உபாயம் சொல்." என்றான். அதற்கு சகாதேவன்:
'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?  
கண்ணனை "புயல்வண்ணன்" என்றழைப்பதைப் பாருங்கள்! பூமியின் பாரத்தைக் குறைக்க புயலாகப் புறப்பட்டான் போலும் புயல்வண்ணன்! உன் திருவுளக் கருத்து அப்படி இருக்க, பாரதப் போர் ஏற்படாமல் தடுக்க உன்னால் மட்டுமே இயலும். எனினும் பாரதப்போரை தடுக்க ஓர் உபாயத்தினைக் கேட்பதால், உன்னைக் கட்டிப்போட்டல் இயலும் என்றான் சகாதேவன். அன்பனின் மனமதை அறிந்த கண்ணனும் பதினாறாயிரம் உருவங்கள் கொண்டு, "இப்போது என்னைக் கட்டுக பார்க்கலாம்" என்றான். மாயவனின் விளையாட்டை அறிந்த தூயவனாம் சகாதேவன், உலகளந்த உத்தமன் பாதங்களைத் தன் மனமாகிய கருத்தினால் கட்டினான்!  

பக்தியும் ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற சகாதேவனை, "அன்பால் என்னை அறிந்த அன்பனே சகாதேவா" என கண்ணனும் அழைக்க, சகாதேவனும் "கண்ணா, வன் பாரதப்போரில் பாண்டவரை உன் பார்வையாலே காத்தருள வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.