Sunday, June 27, 2010

நீள்முடி ஐந்து : ஆழ்வார் மறைமொழி

ஆழ்வார்கள் அருளிய தமிழ்வேதம் இனிக்க இனிக்கச் சொல்லும் அமுதத்துளிகளில் இருந்து ஒரு துளிகள் இப்பகுதியில் பார்ப்போம்.

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற,
தூமணி வண்ணனைப் பாடிப் பற. (313)

-பெரியாழ்வார்
கண்ணன் பொய்கையிற் பாய்ந்து, நீள்முடி ஐந்திலும் நடம் செய்து, காளியனை *மீள்*வித்தானாம்.காளிங்கன் எனப்படும் காளியன் ஏன் ஐந்து தலை அரவமாய் உருவகப் படுத்தப்படுகிறான்?

ஆணவம் மிகுந்தவரை என்ன சொல்கிறோம் - அவருக்கு தலைக்கனம் அதிகம் என்றல்லவா. இந்த "தான்,தனது" என்கிற எண்ணங்கள் படுத்துகிற பாடு இருக்கிறதே, அது சொல்லி மாளாது. தலையை ஊதிப் பெரிதாக்கி, என்று வெடித்துவிடுமோ என எல்லோரையும் அச்சப்படச் செய்யும். ஒரு தலை இருக்கையிலே இப்படியென்றால், ஐந்து தலை இருந்தால்?

பொய்கையில் நீர் அருந்தச் சென்ற அப்பாவிச் சிறுவர்கள், அதிலிருந்த விடமதை அறியாமல் அருந்தி மாண்டனராம். இப்படி நஞ்சாக நின்று அனைவரையும் கெடுக்கும் ஆணவம் என்ன செய்யும்?

கண்ணன் பொய்கையிற் குதித்தவுடன், கலங்கிய பொய்கையினைக் கண்டு சீற்றம் கொள்ள, நீரிலிருந்து எழும்பிக் குதித்து, தன் வால்களில் சிக்குண்டதுபோல் நடிக்கும் கண்ணனைப் பிடித்து அடிக்கத் துவங்கியது. அதற்கு அத்துணை பலம் எப்படி வந்தது. செருக்கு செய்யும் மாயம் கொலோ?

நாமும் பெரும்பாலும் இப்படித்தான் - ஐம்புலன்களும், முக்குணங்களும் செய்யும் மாயத்தால் - அகக்கண் மறைக்கப்பெறுகிறோம். அதன் விளைவால் சீற்றம் மிகுந்து 'தாம், தூம்' தான். தலைக்கேறிய செருக்கு சென்ற இடம் தெரியாமல், இருக்கும் இடத்தை மறக்கச் செய்து, குதிக்கச் செய்கிறது.

அறியாமை காளியனுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். காளியனால் கட்டுண்ட கண்ணனைப் பார்த்த கோகுலச் சிறுவர்கள், அச்சுற்று அலறிக்கொண்டுபோய் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டார்கள். சிலர் பெரிய நாகம் கண்ணனைப் பிடித்தது என்றார்கள். சிலர் ஐந்து தலைப் பாம்பு என்றார்கள், சிலர் நூறு தலைப் பாம்பு என்றார்கள். பார்த்தீர்களா, ஆணவம் தாண்டவமாடும் இடத்தில் ஐந்து நூறாகவும் பயமுறுத்துவதை!

கண்ணனுக்கோ காளியன் சிறுபுல். மிகுந்த உற்சாகத்துடன் காளிங்கன் தலைகளில் மாற்றி மாற்றி 'தா தை தத்தித்தை' என நர்த்தனம் செய்து - அவன் செருக்கை அடக்கினான். கண்ணனிடம் சரணடைந்த காளியன் மீள்கிறான். தன்னை யாரென உணர்ந்து மீள்கிறான் - மாயையில் இருந்து மீள அவன் கண்ணன் அருள் பெறுகிறான்.

காளியனை அடக்கிவிட்டு மீண்டு வந்த கண்ணனைச் சூழ்ந்து கொண்ட சிறுவர்கள் கேட்டார்கள் - கண்ணா, இந்த ஐந்து தலைப்பாம்பை எப்படி அடக்கினாய் - நாங்கள் பயந்தே போய் விட்டோம் என்று. கண்ணன் சொல்கிறான் - ஐந்து தலைப் பாம்பா? அது ஒரு தலைப் பாம்புதான்; அதன் நான்கு குட்டிகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஐந்துதலைப் பாம்புபோல் வேடமிட்டன என்று. கண்ணனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டுதான். அது ஐந்து தலைப் பாம்பும் இல்லை என்கின்றான்!

ஆம், இல்லைதான். ஐந்து கருவிகளால் ஏற்படும் அல்லல் அகற்றப் பெற்றால் ஐந்தில்லையே. ஐயனே - ஒன்றேயெனத் தான் உன்னையே உணர்வேனோ!.
உணர்ந்த காளியனை மீள்வித்தவன், நம்மையும் மீள்விப்பானோ!

ஐந்து கருவிகளும் ஆன்மாவை உடலெனும் செக்கிலிட்டுப் பிழிகையில் பீடிக்கும் ஐம்பெரும் நோய்களில் இருந்து காப்பாற்றும் ஒரே மருந்தும் நீயல்லவோ!

தீர்மருந் தின்றி ஐந்து நோயடும்
செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
ஒக்கின்றாய்,
ஆர் மருந்தினி யாகுவர்? அடலாழி
யேந்தி அசுரர் வன்குலம்,
வேர் மருங்கறுத் தாய். விண்ணுளார் பெருமானேயோ. (3457)
-நம்மாழ்வார்

அசுரர் குலத்தை வேரறுத்த எம்பெருமான், அதுபோல இப்போது எம் பிறவிப் பிணியினை தீர்க்க வேண்டும்.

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவருளென்னும் ஒள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (1461)
-திருமங்கை ஆழ்வார்


அருள் என்னும் வாள் உருவி அறுத்து எறிந்தேன் ஐம்புலன்களை என்பார் திருமங்கை ஆழ்வாரும். பகவத்கீதை அத்தியாயம் 15 இல், பகவான் கண்ணன் வழிகாட்டுவது இதைத்தான் - "பற்றின்மை எனும் கோடாலியால், சம்சார விருட்சத்தினை வெட்டி வீழ்த்து" என்று.

இந்த ஐம்புலன்களும் அப்படியென்ன காளியன் என்னும் பாம்பின் ஐந்து தலைகளுக்கு ஒப்பாகச் சொல்லும் அளவிற்கு மோசமா? இந்த அடுத்த பாசுரத்தில் பாருங்களேன், ஐம்புலன்களை 'வன் கயவர்' என்கிறார் ஆழ்வார்.


ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத

ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல்கிற்பனுன் திருவருளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
அலைகடலரவம் அளாவி, ஓர்
குன்றம் வைத்த எந்தாய். கொடியேன் பருகின்னமுதே. (3459)

- நம்மாழ்வார்

இந்த ஐந்து கயவர்களையும் உன் திருவருள் இல்லாமல் என்னால் எப்படி வெல்ல முடியும்?. கௌரவ கூட்டத்தை வெல்ல பாண்டவர்கள் உன் துணையை நாடியது போலவும், அலைபாய்ந்து கொண்டே இருக்கக் கூடியதும், ஒரே இடத்தில் நிலையாக நிற்க வைக்க கடினமானதுமான ஐம்புலன்களை அடக்க, கோகுலத்துச் சிறுவர்கள் செய்ததைத் தான் நாமும் செய்ய வேண்டும் - கண்ணனை அழைக்க வேண்டும். அவன் அருளால் மட்டும் தான் - நீள்முடி ஐந்திலும் நடம் செய்து இக்கயவரை அடுக்குதல் இயலும்.
அன்பாழி யானை யணுகென்னும்,
நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி
காணானைக் காணென்னும்
கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ். (2153)
- பொய்கையாழ்வார்

ஐம்புலங்களும் துளசிமாலை அணிந்த நெடுமாலை நினைந்து (கை கூப்பித் தொழுது, வாய் நிறைய புகழுரை வாழ்த்தி, கண் நிறையக் கண்டு, செவி இரண்டிலும் கேட்டு) இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். அலையும் புலன்களை அவன் வழி செலுத்தி நன்றான ஒன்றில் நாட்டம் செலுத்துவதே உய்வதற்கான வழியாய் நம்மறை நவிலும், கேளீரோ நல்லுலகத்தாரே!

Saturday, June 12, 2010

எத்தனை யாவும் எத்தனை சொல்லடா

எத்தனை யாவும் எத்தனை சொல்லடா,
எத்தனை யாக்கை எத்தனை வினைகள்
எத்தனை யாவும் எத்தனை சொல்லடா.

நெட்டிபோல் நீரில் நாளெலாம் மிதந்து
வித்தினை மறந்து மற்றதைப் பிடித்தேன் பாரடா.

பித்தனாய் பிழற பித்ததைப் பீடிக்கும்
சொத்தெலாம், கொண்ட சொத்தெலாம் உதவா.

சந்ததம் வீணென அசதியில் தளர்ந்திட
எஞ்சியதில் வீடும் சடுதியில் வாராதா.

இத்தனை துயரையும் இடரையும் ஓட்டும்
சித்தினில் நவமெனச் சுடர்வது யாதடா?

மொத்தமும் சிவமென சிவசக்தியின் முகமென
மெச்சிட உச்சியதை அடைந்தே உய்யடா.

Friday, June 04, 2010

பெய்யெனப் பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழையாய் மனமதிற்
பெய்திடும் மெய்யருளும் மேனியெங்கும் ஓங்கிட
உய்யவே வேண்டும்; உந்தன் உகப்பை
செய்யவே வேண்டும் சிறப்பு.