வெண்பா வடிக்கலாம் வாங்க என அழைத்த அகரம் அமுதா, இப்போது, ஆசிரியப்பா அறியலாம் வாங்க என அழைத்திருக்கிறார்!
----
தமிழ்நம்பி அவர்கள் வழங்கும் பாடங்களில் இருந்து எனக்கு விளங்கிய அளவிற்கு தொகுத்துச் சொல்வேன்:
----
வெண்பா இலக்கணத்தினை முன்பு இங்கே பார்த்தோம்.
வெண்பாவிற்கான தளைகள், வெண்டளைகள் அல்லவா?
1) முதலாவது இயற்சீர் வெண்'தளை'கள்:
மாமுன் நிரை, விளமுன் நேர்!
2) அடுத்து வெண்சீர் வெண்டளைகள்:
காய்முன் நேர்!
இதோடு, இன்னபிற தளைகளையும் சேர்க்கலாம் ஆசிரியப்பாவிற்கு:
அவை:
3) இயற்சீர் வெண்டளையை திருப்பிப்போட்டால் என்ன வரும்?
மாமுன் நேர், விளமுன் நிரை!
இவைதான் 'ஆசிரியத்தளை'
4) வெண்சீர் வெண்டளையைத் திருப்பிப்போட்டால் என்ன வரும்?
காய்முன் நிரை!
இதன் பெயர் 'கலித்தளை'
ஆக, இந்த நான்கு வகைத்தளைகள் தட்டாமல் வருவது 'ஆசு'இரியப்பா, ஆசிரியப்பா!
(ஆசு: குற்றம் ; இரி: நீக்குதல் : ஆக, குற்றம் நீக்கிய பா!)
வெண்பாவைப் போலவே, கனிச்சீர் சேராது.
வெண்பாவின் கடைச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு' போன்றதொரு ஒரு வாய்பாட்டில் முடியுமல்லவா?
ஆசிரியப்பாவின் கடைச்சீர் 'ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்' போன்றவற்றில் முடியும்.
வெண்பாவில் கடைசி அடி மட்டும் முச்சீர் கொண்டும், அதற்கு முந்தைய அடிகள் நான்குசீர் கொண்டும் அமையுமல்லவா?
ஆசிரியப்பாவில், இவ்விதி சற்றே தளர்த்தப்படுகிறது.
முதலடியும், இறுதி அடியும் நான்கு சீர்கள் பெறவேண்டும். குறைந்தது மூன்று அடிகள்.
இடையிடையே, நான்கு சீர்களுக்கும் குறைவாக, முச்சீரோ அல்லது இருசீர் கொண்ட அடிகளோ கூட அமைக்கலாம். இவற்றால், இவை 'வகை' பெறும், அவையாவன:
1. நேரிசை ஆசிரியப்பா : கடைசி அடிக்கு முந்தைய அடி, முச்சீர் பெற்ற அடி
2. இணைக்குறள் ஆசிரியப்பா: இடையிடையே இருசீரோ அல்லது முச்சீரொ பெற்ற அடிகள்
3. நிலைமண்டில ஆசிரியப்பா: எல்லா அடிகளும் நான்கு சீர் பெற்ற அடிகள்
4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.
எதுகை,மோனை:
வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்.
~~~~
பின்குறிப்பு:
அடிகள் அமையப்பெற்ற சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இவ்வாறு வழங்கப்படும்:
இரண்டு சீர்களைக் கொண்ட அடி : குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி : சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி : அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி : கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி : கழிநெடிலடி
~~~~~
இதுதாங்க ஆசிரியப்பாவின் எளிமையான இலக்கணம், என்ன நீங்களும் எழுதத் தயாரா?!
எடுத்துக்காட்டுகளோடு, பாடங்களை படிக்கவும், இதற்கு அடுத்த நிலைகளை அறியவும்,
இங்கே வருக, வருக!