நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்கும் அர்பணிப்பது வழக்கும். சென்ற பதிவில் சக்தி பற்றியதொரு பாடலைப் பார்த்தோம். இந்த பதிவில், திருமகள் பெருமைகளில், அடியேன் அறிந்த வெகு சிலவற்றைப் பார்க்கலாமா?. அதுசரி, அதுவேன் இப்படியொரு தலைப்பு? திருமால் பெருமைன்னு சிவாஜி நடிச்ச படம் வந்துருக்கே அதுமாதிரியான்னு கேக்கறீங்களா? திருமால் பெருமை எல்லாருக்கும் தெரிந்தது. திருமகள் பெருமை?. இந்த உரையாடலைக் கேளுங்க...
அவர் செல்வத்துக்கு அதிபதி, அவரை வணங்கினால் செல்வம் செழிப்பு கிடைக்கும் - இதுதான் நாம் எல்லோரும் பொதுவா நினைப்பது இல்லையா? சரி, அவ்வளவுதானா?
அட, ஆமாங்க, ஆங், எங்க ஊரில் அஷ்டலஷ்மி கோவில் இருக்குல்லே. தனலஷ்மி, தான்யலஷ்மி - இப்படிப் பலவித செல்வங்களை அருள்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே...
சரிதான். அஷ்டலஷ்மி என்பது இலக்குமித்தாயாரின் எட்டு வடிவங்கள் - ஆதிலஷ்மி, தனலஷ்மி, தான்யலஷ்மி, கஜலஷ்மி, சந்தானலஷ்மி, வீரலஷ்மி, விஜயலஷ்மி, வித்யாலஷ்மி என்பவைதான் இந்த எட்டு அம்சங்களாக்கும்.
ஓ, இவங்களும் வீரத்தையும், விஜயத்தையும் தருவாங்களா, நான் அது பார்வதி அன்னைதான்னு நினைச்சேன்!
:-) டொய்ங்...கல்வியா, செல்வமா, வீரமா...சரஸ்வதி சபதம் படம் நல்லா நினைவிலே இருக்கு போல!
இலக்குமி என்று நாம பொதுவா சொல்லறவங்களுக்கு, பலவித சிறப்பு அம்சங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு அம்சத்தையும் தனிதனியா பெருமைப்படுத்தத்தான், இதுபோன்ற சிறப்புப் பெயர்கள். மற்றபடி, எல்லாருமே ஒருவர் தான்!
இன்னும் இருக்கு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் துணைவி இலக்குமித்தாய். திருமாலுக்கே 'திருமகள் கேள்வன்' (திருமகள் நாயகன்) என்றொரு பெயருண்டு. வைணவ ஆச்சார்ய பரம்பரையில், முதன்மையான ஆச்சாரியர் திருமால் என்றால், அதற்கு அடுத்த இடம் திருமகளுக்கேயாம்.
ஆகா, அப்படியா, குருவின் இடத்தில் திருமகளை வைத்துப் போற்றுவதற்கு ஆழ்ந்த காரணம் இருக்கணும் இல்லையா!
இலக்குமியின் மூன்று அம்சங்களாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி அப்படியும் சொல்லிக் கேட்டிருக்கோம் இல்லையா.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி வழியே காணக் கிடைத்தது:
உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்...இவங்க மூணுபேரும் மூணு உலகத்தை ஆள்பவர்களாம் - முறையே விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று.
நம்ப கண்ணபெருமான் இருக்காரு இல்லையா, அவர் மண்ணைத்தின்றபின் வாயைத்திறந்து காட்ட, அதில் இம்மூவலகமும் தெரிந்திட, இந்த மூன்று பேரையும் ஒன்று சேர்த்து விழுங்கியவனாம். அதாவது, அவன், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவனாய் இருக்கிறான். மாமகள் மூவரையும் கொண்ட மாரமணனாய் இருக்கிறானாம்.
அடுத்தது, இந்த முதல் திருவந்தாதிப் பாடலைப் பார்ப்போம்:
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,மாலோத வண்ணர் மனம்?
என்னது, திருமகள்தான் மற்ற இரண்டு பேரைக்காட்டிலும் உயர்வு என்பதுபோல வருகிறதே?
நம்ம குறைகளை கேட்டு, அவற்றை திருமாலிடம் இயம்பி, நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் மட்டுமில்லை, மூவர் இருக்கிறார் என்கிறார் பொய்கையாழ்வார்! அவற்றில் இருவர் - பூதேவியும், நீளாதேவியும், விஷ்ணுவின் சக்தி.
விஷ்ணுவின் சக்தி யார்? இலக்குமி. ஆகையில் மகாலஷ்மியின் அம்சமாகவே - திருமகளின் அம்சமாகவே அவர்களும் இருக்கிறார்கள்.
திருமகளோ, எப்போதும் மாலவன் மார்பிலேயே வாசம் செய்கிறாள்; பெருமாளைப் பிரிந்ததே கிடையாது. எல்லாவிடத்திலும், விஷ்ணுவாக நிறைந்தபோதும், அதிலெல்லாம் நிறைந்திருக்கிறாள்.
பெருமாளை 'சொல்லின் பொருள்' என்றால்,
திருமகளைச் 'சொல்' எனலாம்.
திருமகளை 'அறச்செயல்' என்றால்,
அதனால் விளையும் நன்மையினைத் திருமால் எனலாம்.
எல்லா உயிர்களிலும் ஆணாகத் திருமாலும், பெண்ணாகத் திருமகளும் வாசம் செய்து,
எல்லா ஜனனங்களுக்கும் ஜகத்காரணமாய்த் திகழ்கிறார்கள்!