Wednesday, March 25, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்தொன்று

பா 64:
எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.

பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.

பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.

விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.

பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.

பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.

பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.

விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.

அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8

Sunday, March 15, 2009

தமிழில் ஆத்ம போதம் : பகுதி இருபது

பா 62:
ஒளிர்ந்துலக மெல்லானத னுள்வெளிவி யாபித்
தொளிர்ந்திடு மப்பிரம மோர்வா - யொளிரு
நெருப்பினிற் காய்ந்தங்கி நேரொளிரு மந்த
விரும்புண்டை யைப்போல வே.

பதம் பிரித்து:
ஒளிர்ந்து உலகமெல்லான் அதனுள் வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் ஒளிரும்
நெருப்பினிற் காய்ந்தங்கினேர் ஒளிரும் மந்த
இரும்புண்டையைப் போலவே.

பொருள்:
ஒளிர்ந்து உலகின் உள்ளே, வெளியே, என எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுமான
பிரம்மம் ஒளிருவது -
மந்தமான ஒரு இரும்பு உருண்டையை, நெருப்பில் காட்டி, பழுக்கக் காய்ச்சிட,
அதன் உள்ளும்,புறமும், எல்லாமும் நெருப்பாகவே ஒளிருவதைப் போலவே ஆகும்.

பா 63:
பிரமம முலகிற் பிறிதாகு மந்தப்
பிரமத் தணுவில் பிறிதாய் - பிரமத்தற்
கன்னிய மேது மவிர்ந்தா லதுமித்தை
யுன்னுக கானநீ ரொத்து.

பதம் பிரித்து:
பிரமம் உலகிற் பிறிதாகும் அந்தப்
பிரமத்தின் அணுவில் பிறிதாய் - பிரம்மத்தற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் - அது மித்தையென
உன்னுக கான(ல்) நீர் ஒத்து.

அருஞ்சொற்பதம்:
அவிர்தல் : ஒளிர்தல்
மித்தை : தோற்றமயக்கம்
உன்னல் : நினைத்தல்

பொருள்:
பிரம்மம், உலகத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
அப்படிப் பிரித்து, 'இன்னொன்றாய்'ப் பார்க்கையில்,
பிரம்மத்தினைத் தவிர இன்னொன்று ஒளிர்ந்தால், அது, பொய்யான, காட்சிப் பிழையாகத் தான் இருக்க வேண்டும்,
பாலைவனத்து கானல் நீர்போல.

விளக்கம்:
அத்வைத வேதாந்தத்தின் முடிபாக இப்பாவினைக் காணலாம்.
ஞானம் பெற்றவன், எல்லாவிடத்திலும், பிரம்மத்தினையே பார்க்கிறான்.
மற்றவர்களுக்கு, வெவ்வேறாகத் தெரிபவை எல்லாம், அவன் பார்வையில் 'ஒன்றே'யாம். அதுவே உண்மையாம்.
அறியாமையினால், வெவ்வேறாகத் தெரிந்தவையும் 'ஒன்றென'த் தெரியுமாம்,
அவ்வறியாமை அகன்றதும்.
அங்கே மெய்ஞானம் மட்டுமே, பிரம்மம் எனத் தெளிவித்து ஒளிர்ந்திடச் செய்யும்.
வறண்ட பாலையில் தொலைவில் தெரியும் நீர்ச்சுனை, உண்மையில் தோற்ற மயக்கம் என்பதுபோல,
இவ்வுலகமே பிரம்மம் எனத் தெரிவதும் காட்சிப்பிழையேயாம்.
இவ்வுண்மையை அறிந்தவர்க்கு, தன்னை அறிதலே தலையாய குறிக்கோளாய் இருக்கும்.
தான் யாரெனும் வினவலை விடுத்து, உலகம் யாதெனச் சென்றாற்பின், அது கானல்நீர் வேட்டை போலத்தான் ஆகும்.

"இரண்டாகத் தெரிவதை இருப்பதாகக் கொண்டாலும், அது மறைந்து போகத் தான். ஏனெனில், இரண்டெனத் தெரிவதெல்லாம் காட்சிப் பிழையே. அத்வைதம் மட்டுமே, உன்னதமான உண்மை."
- கௌடபாதரின் மாண்டூக்ய உபநிடதக் காரிகை I, 17