Wednesday, January 30, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஆறு

பா 35:

ஆகாயம் போல அகிலத்தினுள் வெளியான்

சாகாதான் சர்வ சமன் சித்தன் என்றேகாதி

யாவட்றும் பற்றற்றான் என்றும் அமலன் சலியான்

அவன் நானென்றே அறி.
விளக்கம்:

உள்ளேயும், வெளியேயும் எங்கெங்கும் பரவி இருக்கும் அண்ட வெளி போலானவன் வன்.

சாகாதான் - இறப்பில்லான்.
சர்வ சமன் - எல்லாவற்றிலும் சமமாக இருப்பவன்.
சித்தன் - விட்டு விடுதலை ஆகி நிற்பவன்.

உடல் தொடங்கி எல்லாவற்றிலும் ஒட்டுதல் அற்றவன் வன்.

எந்த விதத்திலும் குறைவோ அல்லது மாற்றமோ அடையாதவன் வன்.

அப்படிப்பட்ட அந்த வன் என்னும் பிரம்மமாய் நான் இருக்கிறேன் என்று அறிவாய்.

----------------------------------------------------------------------------------------------
"அகத்தில் பிரம்மமாய் இருக்கிறேன்" என்று எளிதாக சொல்லி விடுகிறோம், பிரம்மம் என்பது எப்படிப்பட்டது - எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது பாருங்கள்!
நினைவாலும் அளக்க இயலா எல்லைகளில் நிஜமாகப் பரவி இருக்கிறது அந்த பிரம்மாண்டம்!

அப்படிப்பட்ட பிரம்மாண்ட பிரம்மம் எப்படிப்பட்டது?
அடுத்த பா சொல்கிறது:

பா 36:

எது நித்தஞ் சுத்தம் எது முக்தம் ஏகம்

எது அகண்ட இன்பம் இரண்டலது எது சத்துச்

சித்தானந்தம் ஆகுன் திகழ்ப் பரபிரம்ம

வத்து யானேயா மதி.

விளக்கம்:
எது எப்போதும் சுத்தமாய், தூய்மையாய் இருக்கிறதோ,
எது எப்போதும் முக்தி அடைந்ததாய், எல்லாவற்றிலும் ஒன்றாய் இருக்கிறதோ,
எது எல்லா இடத்திலும் அகண்டு பரந்து இருக்கிறதோ,
எது பேரின்ப பெருங்களிப்பு தருகிறதோ,
எது அத்வைதமாய் இரண்டல்லவென்று இருக்கிறதோ,
எது அளவிட இயலாத சத் - சித் - ஆனந்தமாக இருக்கிறதோ,
- அந்த அது - பிரகாசமாய் ஒளி விட்டுத் திகழும் பிரம்மம்,
அது நான், நானேதான்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Monday, January 28, 2008

புத்தாண்டுச் செய்தி - 2008

2008, புதியதொரு வருடம் பிறந்து விட்டது. "புதியன புகுதலும் பழையன கழிதலும்" என்றொரு மொழி உண்டு. அதற்கு ஏற்றவாறு புத்தாண்டு புதியனவற்றை வரவேற்பதாக உள்ளது. புதியனவற்றில் எல்லாமே இன்பம் தருவதாக இருப்பதில்லை. தலைவலிகளும் வருத்தங்களும் வரத்தான் செய்கிறது. அவரவர்க்கு அவரவர் கவலை. ஒருவருக்கு பங்குச் சந்தையில் சரிவு என்பது ஒரு கவலை. இன்னொருவருக்கு தங்கம் விலை ஏறுகிறதே என்ற கவலை. இப்படியாக ஏற்றமும் கவலை. இறக்கமும் கவலை. அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை அனுபவங்கள்... கசப்பும், இனிப்பும் பல்வேறு விகிதங்களில் கலந்தவாறு...

இந்த அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதென்ன? கசப்பான அனுபவங்களில் இருந்து ஏற்படும் விளைவுகளை நாம் பொதுவாக விரும்புவதில்லை. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்றொரு மொழி இருப்பினும் நமது சுற்றங்களில் இருக்கும் உரசல்களைப் பெரிது படுத்தி அன்றாடம் வழக்காடுகிறோம். உறவுகளில் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதால் தான் புரிந்துகொள்ளாமல் பிரச்சனைகள் வருகிறது என்பதில்லை. பேசிக்கொள்வதாலும் பிரச்சனைகள் வருகிறது!. உறவுகளில் அவரவர்க்கு உள்ள வட்டங்களில் இருந்து வெளியேவருவதால் அனைவருக்கும் வருத்தங்கள். வெளி வட்டங்களில் எத்தனையோ விஷயங்களை பொருத்துக்கொள்ள நம்மால் இயலுகிறது. ஆனால், உறவுகளில் வரும் உரசல்களையோ பொறுத்துக் கொள்ளாமல் பீரிடுகிறோம்.

ஆண்டொன்று செல்ல வயதொன்றும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வயதோடு சேர்ந்து வளர்ச்சியும் இருக்கிறதா?
ஆண்டாண்டாக நம் அனுபவங்களில் என்னவெல்லாம் நாம் கற்றுக்கொண்டோம்?. நாம் என்ன வழியில் நடந்தோம்? எந்த விதமான பலன்களை அதனால் பெறுகிறோம்?. கற்றுக்கொண்டதனால், கற்றதை சரியாக பயன்படுத்தியதால், எப்போதுமே வரவுதான். எந்த தோல்விக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. எந்த வெற்றிக்கும் இன்னொரு பக்கமும் இருக்கிறது.
இனிய அன்புவங்கள் நமக்கு அதிகம் கற்றுக்கொடுப்பதில்லை. கசப்பான அனுபவங்களில் தான் நாம் கற்றுக் கொள்ள இயலும். நமக்கு நாமே ஆசான். 2007 ஆம் வருடத்திலும் அதற்கு முன்னும் நடந்த அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

2008 ஆம் வருடம் இனிதானதாக இருக்கட்டும்.
--------------------------------------------------------------------------------------
சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் புத்தாண்டுச் செய்தியினைத் தழுவி எழுதி இருக்கிறேன். (தாமதத்தினை பொறுத்தருளவும்)
மூலத்தினைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

Sunday, January 20, 2008

ஆத்ம போதம் - பகுதி ஐந்து

பா 33:


மனமாலனான் ஆதலன் மன்னுதுயர் ஆசை


சினம் அச்சம் ஆதி எனைச்சேரா - வினமாகவப்


பிராணன் மனமில்லான் சுதன் என்றுமறை


செப்புகின்ற தன்றோ தெளி.

விளக்கம்:

மனதில் தோன்றும் ஆசை, சினம், அச்சம் போன்றவையும் என்னோடு (என் ஆன்மாவின் தூய நிலையில்) சேர்ந்து கொள்ளாது, ஏனெனில் நான் (தூய பிரம்மமாகிய நான்) அந்த மனமும் அல்ல.

பிராண சக்தியை நன்றாக பக்குவப்படுத்தத் தெரிந்தவனுக்கு இந்த மனதில் தோன்றும் மயக்க குணங்களை அண்ட விடாமல், மனமில்லாதவனாக இருப்பான் - அவன் தூய்மையான பிரம்மமானவன் என மறை சொல்வதனைக் கேட்டுத் தெளியவும்.

இறைவனின் அருகில் அழைத்துச் செல்லும் மாயையை வித்தை என்றால், இறைவனை விட்டு தூர விலகச்செல்லும் மாயையை அவித்தை எனலாம். மாயையிலும் நல்ல மாயை, கெட்ட மாயை என்றிருக்கிறது பாருங்கள்!


பா 34:


நிர்குண நிரஞ்சன நித்த நிராகர


நிர்விகாரன் சுத்த நிர்கிரிய - நிர்விகற்ப


நித்தமுக்தன் முன் நிகழ்திடப் பட்டவை


அத்தனையு நானென்று அறி.


விளக்கம்:


வன், இருக்கிறானே - அந்த வன் -


அவனுக்கு முன்னால் இருக்கிற அத்தனை பொருளும் சுடர் விட்டு பிரகாசிக்கும்.

அந்த வன் -

குணமில்லாதவன் - இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று எந்த ஒரு குணத்தைக் கொண்டும் அவனை வரையறுக்க இயலாது.

இருளில்லாதவன் - பூரணமான ஒளியாக பிராகசிப்பவன்.

முடிவில்லாதவன்.

வடிவில்லாதவன் - உருவமில்லாதவன்,

மாறுதலில்லாதவன்,

செயலற்றவன்,

வேறுபாடற்றவன்.

இவ்வாறாக தளைகள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மமாக இருக்கிறேன், நான் - ஆகையால், நானே வன்.

என்று ஆன்மா அறிந்திடல் வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Friday, January 18, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி நான்கு - அவித்தை

பா 31:


அவித்தையா லானவை யாகமுதற் காணும்

இவை குமிழிபோலவழி வெய்தும் இவற்றின்

அயலாம் அமலவகம் பிரம்மமாம் என்றறி

யராமல் என்றும் அறி.

விளக்கம்:

இரண்டு வகையானவர்கள் - ஒரு வகை : அவித்தைகளால், இறையை வெளியே அங்கும் இங்கும் எங்கும் தேடி அலைபவர்கள் - இவர்கள் நீர்க்குமிழிபோல் எளிதில் உடைந்துவிடும் இயல்பு கொண்டுள்ளவர்கள். இன்னொரு வகை: தம் அப்பழுக்கற்ற தூய்மையான அகமே பிரம்மம் என அறிந்தவர்கள். அவ்வாறு பிரம்மம் என்றறிந்தவர்கள் அந்த அறிவில் இருந்து எந்த மாறுதலும் அடையாதவர்கள்.

அவித்தை: உபாதிகளால் ஏற்பட்ட மயக்கத்தினால், நான், எனது என்கிற ஈகோ ஏற்படக் காரணமாகிறது. அவ்வாறு ஆன்மாவில் விளையும் உபாதி, அவித்தை எனப்படுகிறது. பாசி பிடித்த குளத்தில், மேலே இருக்கிற சூரியனின் பிம்பம் தெரிவதில்லை. ஆனால், தெளிந்த நீருடைய குளத்திலோ, பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. குளத்தில் இருக்கும் பாசி போலத்தான் அவித்தைகளும். அவற்றை அகற்றினால், தெள்ளத் தெளிவாகத் தெரியும் சச்சிதானந்தம்.

மனதின் குணங்களுக்கும் ஆன்மாவிற்கும் நேரடித் தொடர்பேதும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதனை அடுத்த பாவில் பார்ப்போம்:

பா 32:

உடலுக்கு வேறெனக் குண்டா தன் மூத்த
லோடுகுன்றல் சாவுமுதலொன்றா - படர்ந்த
வொலிமுதற் புலன்களோடு ஒன்றல் எனக்கின்றே
யலன்பொறிகளாய் ஆனத லால்.

விளக்கம்:

உடல் வேறு தான் வேறு என உணர்ந்த ஆன்மாவிற்கு - மூப்பில்லை, சோர்வில்லை, இறப்புமில்லை - இப்படியாக உடலுக்கு நிகழும் மாறுதல்கள் ஏதுமே பிரம்மத்தை உணர்ந்த ஆன்மாவுகில்லை. உடலின் அவையங்களோடான ஒன்றுதல் நான் என்ற அகங்காரத்தினையே தந்திடும். ஆதலால் ஆன்மா, ஒலி முதலான புலன்களில் ஏற்படும் உணர்வுகளோடு ஒட்டுதல் இல்லாமல் இருந்திடும்.


---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Tuesday, January 15, 2008

ஆத்ம போதம் - பகுதி மூன்று - நேதி நேதி

பா 28:

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் - விளங்கு
மறிவுருவாம் ஆன்மா வறிந்திடத் தன்னைப்
பிறித்தறிவு வேண்டாப் பெறாது.

விளக்கம்:

அங்கே அழகான விளக்கொன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இருண்ட வீட்டுக்கு நல்ல ஒளியை அளித்துக் கொண்டிருக்கிறது.
அந்த விளக்கு எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது என்பதனை - அந்த விளக்கைப் போன்ற "இன்னொரு" விளக்கைக் கொண்டு விளக்க முடியாது. இந்த விளக்கைப் பற்றி விளக்க இன்னொன்று தேவையில்லை.

அதுபோல,
பேரறிவின் உருவாய் சுடர் விடும் ஆன்மாவினை யாதென்று விளக்க, இன்னொரு பொருள் ஏதும் தேவைப்படாது.

ஏன் அப்படி? ஏனென்றால், இந்த ஆன்மாவாகிய விளக்கு தானாக சுடர் விடுகிறது. அதன் ஒளிக்கு அதுவே காரணம். அது பேரானந்தம் தரும் உண்மையான ஞான சொரூபம். ஆதலால், ஆன்மா தான் யாரென்று விளங்கிக்கொள்ள இன்னொன்று தேவையில்லை.

அந்த ஆன்மா, இன்னொருவரின் உதவியில்லாமால் தானாக தன் நிஜ சொரூபத்தினை உணர்ந்திட இயலும் என்றால், குருவின் உபதேசமெல்லாம் எதற்கு எனவும் கேட்கலாம். சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவை அல்லவா?
குருவின் உபதேசமோ அல்லது மறைகள் மூலமாக கற்று அறியும் எந்த அறிவும் தூண்டுகோலாகத்தான் அமையும். சரி, அப்படியென்றால், அந்த ஆன்மா, தான் யார் என்ற உண்மையை அறிந்திட என்ன செய்ய வேண்டும் என்று கேட்கலாம். அதை அடுத்த பா சொல்கிறது.

பா 29:

நேதிநேதி வாக்கினா நீக்கி உபாதியெலா
மீதியாஞ் சீவான்மா மீதிலா - வாதியா
மப்புறம் ஆன்மாக்களின் ஐக்கியமா வாக்கியங்கள்
செப்புவ தொர்ந்து தெளி


இது இல்லை, இதுவும் இல்லை, இதுவும் இல்லை (நேதி நேதி - பிரஹதாரண்யக உபநிடதம்) என்று ஒவ்வொன்றாக ஆன்மாவின் உண்மையான உருவம் இல்லை என்று கழித்துக்கட்டி, இதுவரை சேர்த்துவந்த உபாதியெல்லாம் ஒவ்வொன்றாக கழித்துக்கட்டி, கடைசியில் மிஞ்சி இருப்பது என்ன? சுயத்தில் மீதி இருப்பது என்னவென்றால் - எல்லாவற்றுக்கும் மேலானதான சச்சிதானந்தம் - அதுவே எல்லா ஜீவன்களிலும் ஒன்றாக இருப்பதாகும்.

இவ்வாறு ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதலற்ற தன்மையை உணர்ந்து கொள்வதுதான், தன்னை யார் என உணர்ந்து கொள்வதாகும். இந்த உண்மையை ஆன்மா அறிந்து கொள்வதுதான் அனைத்து துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறுவற்கான ஒரே வழி.

உபாதி: உபாதி என்ற சொல்லுக்கு - ஆன்மாவின் மாயைத் தோற்ற மயக்க நிலை என்று சொல்லலாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றையும் 'நான்' என தவறாக அடையாளம் கண்டுகொள்கிறோம். இதுபோன்ற ஒவ்வொரு நிலைப்பாடுக்கும் ஆன பெயர் 'உபாதி' என வழங்கப்படுகிறது. உபாதி ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

சச்சிதானந்தம்: சத் + சித் + ஆனந்தம் :
சத்: சகலத்திலும் நிறைந்திருக்கும் பரமன் அல்லது பிரம்மம்.
சித்: சைத்தன்யம் - பேரறிவு - மெய்ஞானம்.
ஆனந்தம்: பேரின்ப பெருங்களிப்புத் தரும் ஆனந்தம்.

ஜீவனில் சத்தானது, சித் என்னும் மெய்ஞானம் தனை மறைத்திடும் உபாதியெல்லாம் இழந்தபின் சித்தம் தெளிகிறது. தெளிந்த ஜீவனில், பரமனின் உண்மை பேரின்ப ஆனந்த நிலையினை அடைவதே சச்சிதானந்த நிலை ஆகும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்