எந்த ஊர் எனத் தெரியவில்லை, ஒரு கிராமம் போல இருந்தது. அதில் அப்போது நாங்கள் வசித்து வந்த வீடு கொஞ்சம் வித்யாசமானது. பெரிய வீடு. கொஞ்சம் பழைய வீடு. கிராமத்தில் எங்கள் தாத்தவின் வீடு போலவே தோற்றமளித்தது. ஆனால் தாத்தாவின் வீடுபோல் தனி வீடு அல்ல. ஒட்டினாற்போல் பக்கத்திலேயே இன்னும் சில வீடுகள். அதிக வீடுகள் இல்லை, சுமார் நான்கைந்து இருக்கும். எல்லா வீடுகளுக்கும் முன்னால் பொதுவாக, பெரிய காலியான மைதானம் போன்ற வெற்று வெளி். அந்த இடத்தை சுற்றிலும் மதில் சுவர் ஒன்று அமைக்கப்பட்டு, இந்த இடம் எங்களால் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது. மதில் சுவரை ஒட்டி, கார்கள் மற்றும் ஏனைய வண்டிகளை நிறுத்துவதற்காக வெள்ளைக் கோடுகள் போட்டு இடம் ஒதுக்கப் பட்டு இருந்தது. (கிராமத்தில் இது எப்படி? இப்படி, சம்பந்தமில்லாதவை கனவில் ஒன்றாக கலக்கும், கனவில், இதைப்பற்றியெல்லாம் கேட்பதில்லை!). திறந்த வெளியில் ஆங்காங்கே ஒரு சில மரங்களும் இருந்தது.
அப்போது நான் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு கலை நிகழச்்சியைப் பார்ப்பதற்கு. கூட என் மனைவியும், தந்தையும் வருகிறார்கள். இன்னும் 15 நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு இதற்கு முன் சென்றதில்லை. ஆனால், இணைய தளத்தில் பார்த்ததில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருப்பதாக தெரிந்தது. நடந்தே போய் விடலாமா என முதலில் யோசனை. பின்னால் காரிலேயே செல்வதாக முடிவு செய்தேன். வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வெள்ளை நிற ட்ரக் நிறுத்தப் பட்டு இருந்தது. எதற்காக என்று சரியாகத் தெரியவில்லை. எதற்காகவோ வாடகைக்கு அமர்த்தி இருந்தோம். வீட்டுக்கு வெளியே வந்தவுடன் தான், ட்ரக் வாசலிலேயே நிற்பது கவனத்துக்கு வந்தது. உடனே அதை ஓரமாக நிறுத்த முயன்றேன், இந்த அவசரத்தில் இதுவேறா என்ற சலிப்புடன். அவசர அவசரமாக அதை சிரமத்துடன் நிறுத்தி விட்டு, காரில் எல்லோரும் ஏறினோம். காரை, அது நிறுத்தப் பட்டு இருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்தேன். திடீரென, கார்களை பார்க் செய்வதற்கு வசதியாக போடப்பட்டு இருந்த வெள்ளைக் கோடுகள் கவனத்தை ஈர்த்தன. ஏனோ தெரியவில்லை, காரை ரிவர்ஸில் எடுத்து, அந்த இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே நிறுத்தி விட்டேன். பின்தான் நிறுத்தக் கூடாது, வெளியே செல்ல வேண்டுமே என்ற நினைவு மனதில் உறைக்க, மீண்டும் காரைக் கிளப்பி, ஒரு வழியாக வேளியே வந்தேன்.
இணையத்தில் அரங்கத்திற்கு செல்லும் வழியை பார்த்து இருந்ததில், வீட்டில் இருந்து வெளியே வந்தபின் இடது பக்கம் திரும்பி, பின்னர் அடுத்த சாலையில் மீண்டும் இடது பக்கம்் திரும்ப வேண்டும் எனச் சொல்லி இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே அடுத்த திருப்பம் வந்தது. அதில் இடது பக்கம் திரும்பியதில் அரங்கம் என்று வெளியே எழுதி இருந்ததைப் பார்த்து, காரை அதன் அருகே நிறுத்து விட்டு, வெளியே வந்தேன். அப்போதுதான் கவனிக்கிறேன். இந்த அரங்கமும், நாங்கள் வசிக்கும் வீட்டின் பின் பகுதியில் இருப்பதுதான் என்று. அடடா, இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்துடன், வேகமாக நுழைவாயிலைத் தேடி நடக்கிறேன். நுழைவதற்கான வழி எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கொண்டே விரைவாக நடந்ததில், மற்றவர்கள் கூட வருகிறார்களா என்பதுகூட கவனிக்காமல், இப்படியும் அப்படியும் விரைந்தேன். பின்னர் சிறிதான ஒரு வாயில் தென்பட்டது. இவ்வளவு பெரிய அரங்கத்திற்க்கு இவ்வளவு சின்ன வாயிலா என்ற சந்தேகத்துடன், பின்னால் திரும்பிப் பார்த்தால், கூட வந்தவர்கள் யாருமில்லை. அப்போது, இந்த வாயில் வரை ஏற்கனவே வந்து திரும்பியது போன்ற விந்தையான உணர்வு வந்தது. சரி, அவர்கள் வருவதற்குள், இதற்குள் சென்று இதுதான் சரியான வழியா என்று பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று உள்ளே செல்லலானேன்.
உள்ளே செல்லச் செல்ல அது, குகைபோல விரிந்தது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய நெடிசலான ஒற்றையடிப் பாதை அது. கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ அதுபோல பாதை சென்று கொண்டு இருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு மூலையில் இதற்கு மேல் செல்ல இயலாத இடத்தை அடைந்தேன். அந்த இடத்தில் இருந்து மேலே பார்த்தால், திறந்த வெளியாக மேலிருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் வரும் திசையில் செல் என உள் மனது உச்சரித்தது. அந்த இடத்தில் பக்கத்துச் சுவர் சுமார் நான்கு அடிகள்தான் இருந்தது. சரி, இதன் மேல் ஏறி அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கலாம் என தீர்மானித்தேன். கைகளை சுவரின் மேல் ஊன்றியவாறு, எம்பிக்கொண்டு, அதன்மேல் ஏறி, மேல் பக்கம் வந்தடைந்தேன்.
மேலே ஏறி வந்த பின் அந்த இடம் அந்த வீட்டின் மொட்டைமாடி எனத் தெரிகிறது. மொத்த மாடியும் மொட்டையாக இருக்காமல், அங்கேயும் அறை ஒன்று இருந்தது. அதன் மேல் புறக் கூரை கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. அதன் வாசலில் இரும்புச் சட்டங்களில் ஆன கதவொன்றும் இருந்தது. அதன் வழியே உள்ளே ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கலாம் என நினைத்து, அதை நெருங்க, யாரோ அருகில் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அவன் ஒரு இளைஞன். அவன் சட்டையில் ஆங்காங்கே கறுப்பாக அழுக்காகி இருந்ததில், அவன் எதோ வேலையாள் போலத் தோன்றியது. "என்ன சார், இங்க டிக்கட் வாங்க வந்தீங்களா, டிக்கட் எல்லாம் வித்துப் போச்சுங்க, ஹவுஸ் ஃபுல் ஷோவாம், அதோ பாருங்க, டிக்கட் வாங்கினவங்க எல்லாம் உள்ளே இருக்காங்க" எனக் கை காட்டினான். இரும்புச் சட்டங்கள் வழியாக அந்த அந்த கட்டிடத்தின் கீழ் தளம் தெரிந்தது. அங்கே மனிதர்கள் கையில் எதோ காகிதங்களை வைத்துக்கொண்டு, இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டவர்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், முதலில் தோன்றியது - இந்த இடத்தை விட்டு முதலில் அகல வேண்டும் என்பது தான்.
அப்போதுதான் அப்பா மற்றும் மனைவியின் நினைவு வந்தது. அடடா, அவர்களை விட்டுவிட்டு வந்து இவ்வளவு நேரம் கடந்து விட்டதே, அவர்கள் நமக்காக எங்கெல்லாம் தேடுகிறார்களோ என்ற கவலை அரித்தது. அனேகமாக அந்த குகை போன்ற நுழை வாயில் வரை வந்து அங்கே காத்திருப்பார்கள், முதலில் அந்த இடத்துக்குச் சென்று பார்ப்போம் எனத் தோன்றியது. என்னுடன் பேசிய இளைஞனோ என்னை விட்டு தூரத்தில் எதோ படிகளில் இறங்கிச் செல்லத் துவங்கி விட்டான். நாம் வந்த வழியை விட இந்த இளைஞன் செல்லும் வழி அனேகமாக சரியானதாகத் தான் இருக்கும் என எண்ணி அவனை பின் தொடரலானேன். தொடர்ந்து அந்தப் படிகளில் நானும் இறங்கினேன். சில வளைவுகளுக்குப்பின் ஒரு திறந்த இடத்தை அடைய, அந்த இளைஞனைக் காணோம். அந்த இடமும் தரையிலிருந்து நீண்ட உயரத்தில் இருந்தது. அந்த இடத்தில்் இருந்து சற்று தொலைவில் கூட்டமாக பின்புறம் திரும்பியவாறு கொஞ்சம் நபர்களும் - அதில் அப்பாவும் மனைவியும் கூடத் தெரிந்தார்கள்.
இந்த உயரமான இடத்திலுருந்து கீழே குதித்தால்தான் அந்த இடத்தை சீக்கிரமாக அடைய இயலும் என்று முடிவு செய்தேன். ஆனால் அது எவ்வளவு அபாயகரமானது என்பதை என் மனம் யோசிக்கவே இல்லை. அந்த இடத்திலிருந்து நேராக குதிக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் பக்கத்திலுள்ள மதில் சுவரிலோ அல்லது கூரான இரும்பு வேலிக் கம்பிகளிலோ விழுந்திடக்கூடும். குதிப்பது என விளிம்புக்கு வந்து, ஒரு காலைத் தூக்கியவுடன் தான் இதெல்லாம் வேறு கண்ணுக்குத் தெரிகிறது. இனிமேல் திரும்பவும் முடியாது. என்ன செய்வது, அதிகம் யோசிக்காமால் குதிப்பதே நல்லது என்று எண்ணி குதித்தும் விட்டேன். நல்லவேளே, அடி ஏதும் படாமல் நல்லபடி கீழே வந்துவிட, படுக்கையில் இருந்து எழுந்தேன்.
கனவு கலைந்து, இது கனவுதானா என பெருமூச்சு விட்டாலும் கனவின் நினைவுகள் அவ்வளவு எளிதாக நினைவினில் இருந்து அகலவில்லை. அவ்வளவு எளிதில் அகலக் கூடியதா இந்தக் கனவு?!