Tuesday, May 15, 2007

கூரையில் ஜன்னல்

ப்ரியாவும், ரகுவும் அந்த சூப்பர் சைஸ் ஓவியத்தை கண் கொட்டாது பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அண்ணார்ந்து. ஏனெனில், அது புதுமையாக சுவரில் இல்லாமல் வீட்டுக் கூரையில் தெரிந்தது... ஆம், கூரையின் வழியாக, பௌர்ணமி தினத்தின் முழுமதியின் துணையில் தெரிந்தது. நிலவின் ஓளி கீற்றைகள், என்னதான் வெள்ளை நிறத்தை சேந்த்தாலும், அந்த ஓவியத்தின் தூரிகை இன்னமும் கரு நீல நிறத்தில்தான் இருந்தது. ஆங்காங்கே, விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இதுவே நண்பகல் நேரமாயிருந்தால், ஆதவனின் அதிகப்படியான வெளிச்சத்தில் இந்த தொலைதூரத்து நட்சத்திரங்கள் கண்ணில் தெரியாமல் போயிருக்கும். எல்லாம் ஒரே நீள வெள்ளைத்திரையை விரித்தாற்போல் இருக்கும். நல்லவேளை. இது முன் இரவு நேரம். கொஞ்ச நேரத்தில் கண் அயர்ந்தால், கனவு உலகத்தில் சயனிப்பு. அதற்குமுன் இங்கேயே வேற்று உலகின் தூர தரிசனம், இதோ கூரையில் இப்போது.


(படம் மூலம்: ப்ராஸ் எக்ஸ் கோஹல்ஹாஃப்)

கூரையில் கண்ணாடி ஜன்னலை நிர்மாணித்தது இப்படி ரம்யமானதொரு வானத்தை கையருகே கொண்டுவந்து நிறுத்தும என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சூரிய ஒளியை பகல் நேரத்தில் பெருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், எதிர்பார்ப்பின் இன்னொரு பக்கம், எதிர்பாராமல் இதம் தந்தது.


(படம் மூலம்: அமீர் ஹோஸைன் அபோல்ஃபா)

நிலத்தை நடந்தோ, ஊர்தியில் பயணித்தோ அளவிட முடியும். நீந்தத் தெரிந்தவர்கள், நீர்ப்பரப்பிலும் அதன் ஆழங்களிலும் அதன் எண்ணிலடங்கா வளங்களை அருகில் சென்று பார்க்க முடியும். விண்வெளியை மட்டும் வெகு தொலைவில் இருந்து கண்டுணர, அதில்தான் எத்தனை எத்தனை விந்தைகள்!

இப்போதைக்கு நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல், வெள்ளி கோளும் கண்ணுக்குத் தெரிகிறது.
நள்ளிரவு நகர நகர நிலவு இல்லாத புதன் கிரகமும் கண்ணுக்குத் தெரியுமாம். அவ்வளவு நேரம் விழித்திருப்போமா தெரியவில்லை. இப்போதைக்கு கண்ணுக்கு தெரியும் நட்சத்திரங்களை கோர்த்து ஒருவம் ஏதாவது வருகிறதா? ஆ, இரட்டையர்கள் கொண்ட ஜெமினியோ?

Thursday, May 03, 2007

காதல்ல, காதல் என்று.

இரவின் இருளில்
என் நாசித் துவாரங்களில்
கூகூவென கூவினாள்...

யாதொரு எதிர்வினையும்
என்னிடம் இல்லாததால்
தட்டித் தடவிப்பின்,
'அடடா காதல்லவோ
என்று நினைத்தேன்'
என்றவாறு...

பதிலாக நான் - என்
செவிகளுக்கு மூக்கு வழியாகவும்
எட்டிய செய்தியை -
காதல்ல, காதல் என்று.