ஒவ்வொருவருக்கும் தாய் மொழி உண்டு. ஹைகூ கவிதை வடிவங்களின் தாய் மொழி, ஜப்பானிய மொழியாகும். ஜப்பானிய மொழியில் முதன் முதலில் தோன்றிய இக்கவிதை வடிவங்களின் தாக்கம் பல்வேறு மொழிகளிலும் காணலாம்.
ஹைகூ கவிதைகள் பொதுவாக மூன்று வரிகளில் இருக்கும். முக்கியமாக மூன்றாவது வரி, முதலிரண்டு வரிகளில் உங்களுக்கு ஏற்படுத்திய எண்ணத்தை மாற்றும்படியாக - திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கும்.
அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களில் ஏற்படும் எதிர்பாரா ஆச்சரியங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஹைகூ கவிதைகள் ஜொலிக்கின்றன. சம்பவ நிகழ்வுகளில், நிகழும் நிதர்சனத்தை எடுத்துரைப்பதே ஹைகூவின் அபாரம். அதில் ஆச்சர்யத்தையும் சேர்ப்பது கவித்துவம்.
இவற்றில் உவமைகள் இருக்காது. கற்பனை இருக்காது. நிகழும் சம்பவம் மட்டுமே இருக்கும். உவமையும், கற்பனையும் இல்லாமல் கவிதையா என்று வியக்கச் செய்தாலும், இவற்றின் வீச்சு அதீதமானதே. நிகழும் சம்பவத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டு, அவரையும் அந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே ஹைகூ கவிதைகளின் நோக்கம்.
ஹைகூ கவிதைகள் வெற்றிடத்திலிருந்து திடீரெனத் தோன்றிவிடவில்லை. லீ பொ, சைக்யோ போன்ற சீனத் துறவிகளின் புத்த மற்றும் ஜென் கருத்துக்கள் கொண்ட கவிதைகளில் காணப்பட்ட நகைச்சுவை கலந்த நிதர்சனம், ஹைகூ கவிதைகளின் முன்னோடி எனலாம்.
சில ஜப்பானிய ஹைகூ கவிதைகள்:
குகிபகொ நொ
குகி கா மின்னா
மகாத்தே இரு.
தமிழில்:
ஆணிப் பெட்டியில்
எல்லா ஆணிகளும்
மடங்கி இருக்கின்றன.
ஷிண்டய் நொ
அனா வா யானே கர
மித்தே குரு.
தமிழில்:
பெரும் அதிஷ்டத்தின்
வழி - கூரையின் ஓட்டையில்
தெரிகிறது.
டே ஓ சுயித்தே
உடா மோஷிகுரு
கவாசு கானா
தமிழில்:
கைகள் தரையில்
பாட்டு ஒன்று பாடப்
போகிறது தவளை.
(ஜப்பானிய கவிதைகள் பலவற்றிலும் தவளைகள் பாடகர்கள்!, நம் குயில் போல.)
யூகி வ ஹரேதரு
கொடொமொர நொ கோஎ நி
ஹி க அடாரு.
தமிழில்:
பனி நின்றுவிட்டது
சிறுவரின் கூக்குரலில்
ஞாயிறு ஒளிர்கிறது.
சுபோ நி ஷிட்டே
மியமா நொ ஹோ நொ
ஹனா ஹிரகு.
தமிழில்:
குவளையில் சிறை
பெரும் மலை மக்நோலியா மலர்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
கோகினுகெடே
காசுமி நொ சொடொ நொ
உமி ஹிரோஷி.
தமிழில்:
துடுப்பிட்டுக் கொண்டே
மூடுபனியில் செல்லச்செல்ல
திடீரென்று பெருங்கடல்.
என் பங்குக்கு முயன்றதில்:
பல் வெளுக்க மருத்தவரிடம் செல்ல
நன்றாக பட்டை தீட்டினார்
என் பர்ஸை.
பெருத்த மழை
பள்ளி செல்ல இயலாது
கிழமையோ ஞாயிறு.
மலர்கள் மலர்ந்திடும்
வெள்ளைப்பூக்கள் உதிர்ந்திடும்
மேலதிக மலர்க்கூட்டத்தில்.