Saturday, December 30, 2006

இந்தியர்களின் உலகநோக்கு பற்றியொரு கருத்துக்கணிப்பு

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கேற்ப அன்று தொட்டு இன்று வரை பாரத நாட்டிலிருந்து தங்கள் வாழ்க்கை மேன்மையின் குறிக்கோளிற்காக பல நாடுகளில் தற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் குடியேறி பொருள் ஈட்டுவோர் ஏராளம், ஏராளம்.

இன்றைய உலகத்தின் அக்கரைப்பச்சைகளில் அரசனாக திகழும் அமெரிக்காவிற்கு எப்படியாவது வந்தாக வேண்டும் என்று கனவு கண்டு அதை நிறைவேற்றியவர்களின் எண்ணிக்கை, இன்றைய கணக்குப்படி - 1.2 மில்லியன்!

கணிணித்துறையில் சென்ற பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியர்களின் வருகை அமெரிக்காவில் பெருகுவதற்கோர் வடிகாலாய் வழி வகுத்தது. அதே துறையினர் தங்கள் துறையில் உள்ள அமெரிக்க இந்தியர்களைப்பற்றி ஓர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அதன் முடிவுகளில் இருந்து சில துளிகள் இங்கே:

வளைந்து கொடுக்கும் தன்மையும், புதிய வணிக நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் உலக சந்தையில் வெற்றி பெருவதற்கு முக்கியமான காரணிகளாக தென்படுகின்றன.

உலக நோக்குடன் செயலபடுவதற்கு ஒருவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றார் என்பது முக்கியமில்லாவிட்டாலும், இந்தியர்களிடமும், அமெரிக்கர்களிடமும், ஜப்பனியர்களுமே மற்ற நாட்டவர்களைக்காட்டிலும் அதிகமான உலக நோக்குடன் செயல்படுகிறார்களாம்.

இந்திய கணிணித்துறையினர் தங்களிடம் இருக்கும் காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மையாலேயே உலகச்சந்தையில் மாறிவரும் காலத்திற்கேற்ப தாக்குப்பிடிக்க இயல்வாதாக கருதுகிறார்கள்.

அவர்களின் இந்தியரல்லாத சகாக்களிடம் கேட்டபோது, இந்திய கணிணித்துறையினரிடம் அதிகமான தொழில் நேர்மை காணப்படுவதாக கூறுகின்றனர். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான நேரம் வேலை செய்ய முன்வருவதாகவும், அதில் தாக்குப்பிடிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் முழுதும் படிக்க கீழே உள்ள pdf:

dec06_learning_gmirpaper_anissha_ranjana[1]
dec06_learning_gmi...
Hosted by eSnips

Friday, December 29, 2006

பாடல்: தமிழிசை பாடுகின்ற வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!

(தமிழிசை...)

பூம்பாவைக்கு உயிரை தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!

(தமிழிசை...)

பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக் கேட்கலாம்!

Thursday, December 28, 2006

தமிழில் ஆத்ம போதம் - பகுதி 2

சென்ற பகுதியை தொடர்ந்து, இந்த பகுதியில் மேலும் சில சுலோகங்களைத் தருகிறேன். படித்தவற்றில் என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் இயம்புகிறேன். பிழைகள் இருப்பின் பொருத்தருளவும்.

22.

ஓடும் தெளிந்த நீரில் தெரியும் வானமும், நிலவும் பார்ப்பதற்கு நகர்ந்து நீரில் ஓடுவதாக
அறியாதார் கொள்வார். அதுபோல மனதின் போக்கு, விருப்பம் மற்றும் குறைபாடுகளுக்கு ஆன்மாவே காரணம் என்று தவறாக கொள்வார் அறியாதவர். மனமானது - நீரில் தெரியும் நிலா, நிஜமான நிலாவான ஆன்மா அல்ல, அதன் பிம்பமே.

23.

விருப்பம், ஆசை, துன்பம், இன்பம், வலி, ஓய்வு ஆகியவை மனம் செயல்படும் வரைதான்.
ஆழ்ந்த கனவுகளற்ற தூக்கத்தில் அவையெல்லாம் உணர இயலாதவை, ஏனென்றால் அப்போது மனம் செயல்படுவதில்லை.
ஆகவே, இவையெல்லாம் மனதின் உணர்வுகள் தானே தவிர, ஆன்மாவுடையது அல்ல.

24.
அப்படியானால் ஆன்மா எப்படிப்பட்டது?

என்றென்றும் நிலையானது.
தூய்மையானது.
நிதர்சனமானது.
சித் ஆனது.
ஆனந்தம் ஆனது.

இவையெல்லாம் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்ல முடியாது.
இவை சூரியனின் ப்ராகசத்தையும், சதாரண தண்ணிரின் குளுமையும், நெருப்பின் வெம்மையும் போல -
இயற்கையாக இயைந்து இருப்பன ஆன்மாவிற்கு.
இவையெல்லாம் எப்போதும் சற்றும் குறைவில்லாமல் இருந்து வருவன.
மாயையினால் ஆன்மாவின் உண்மை நிலையை நம்மால்தான் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

25.
மனம் மாறும் தன்மை உடையது.
ஆன்மாவோ மாறாத் தன்மை கொண்டது.
மனதால் 'நான் எல்லாம் அறிந்து கொண்டேன்' என்று நினைப்பதால், மனம் ஆன்மாவின் நிலையை அடைய இயலாது.

26.
என்றும் விகாரமில்லாதா ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றி அதேயென்றாலும் ஒன்றிய
ஜீவனே எல்லாமெனத் தெரிவான்செய்வான் காண்பான்
பாவத் தான்மாயோகி பார்.


என்றும் மாறுதல்களை அடையா ஆன்மாவும், தன் புத்தியும் சரிநிகர் என தவறாக அறிவான்.
ஒருவருடைய அறிவும், மனதின் எண்ணங்களும் இடம், நேரம் போன்றவைகளால்
வரையுருக்கப்பட்டது. ஆனால் ஆன்மாவே எல்லையில்லாத் தன்மையுடையது.

ஜீவன் தன் மனதில் சித்தின் பிம்பத்தினால், ஆன்மாவின் குணங்கள் எல்லாம்
மனதில் பிம்பத்திலும் தெரிவதால், இரண்டும் ஒன்றென - தவறாக நினைக்கிறான்.

27.
தன்னைத்தான் ஜீவனைத் தாம்பிலே பாம்புபோல்
எண்ணியே அச்சமுறுகின்றான் - தன்னைத்தான்
ஜீவனால் அன்யபரமன் ஆன்மாவென்று
தெரிந்ததனால் அவன் ஞானியாவான்.


சுருண்டு இருக்கும் தாம்புக்கயிற்றைப் பார்த்து பாம்மென்று திகில் கொள்வான் அறிவிலியான்.
ஆன்மாவை ஜீவன் என்று நினைப்பாரும் அவ்வாறே அஞ்சுவார். ஆன்மா ஜீவனல்லா, பிரம்மம் என்று நினைப்பாருக்கு அந்த பயம் இல்லை.

இரண்டு என்று கொள்வாருக்குத்தான் பயமெல்லாம். இரண்டு என்பதே இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று.

Monday, December 25, 2006

மன ஊஞ்சல்

கபீரின் அமுதகவி மொழிகளில் மன ஊஞ்சல். ஆங்கில மொழியாக்கம் : ரபீந்திரநாத் தாகூர்

மன ஊஞ்சல்

Between the poles of the conscious and uncoscious, there has the mind made a swing:

Thereon hang all beings and all worlds, and that swing never ceases its sway.

Millions of beings are there: the sun and moon in their courses are there:

Millions of ages pass, and the swing goes on

All swing! the sky and the earth and the air and the water; and the Lord himself taking form:

And the sight of this made Kabir a servant.


தன் அறிவிற்கும், அறியாமைக்கும் இடயே உழலும் மன ஊஞ்சலில் -
இந்த உலகமும், ஏன் எல்லா உலகங்களும் ஆடுகின்றன.
இதே ஊஞ்சலில் உருவமே இல்லாத அரூபியான இறைவனும்
தனக்கென உருவம் கொள்கிறானே என வியக்கிறார் கபீர்.


அவன் குழலோசை

The flute of the Infinite without ceasing, and its sound is love:

When love renounces all limits, it reaches truth.

How widely the fragrance spreads! It has no end, nothing stands in its way.

The form of this melody is bright like million sons:

incomparably sound the vina, the vina of the notes of truth.


அடிமுடி இல்லாத அவன் குழலோசை முடிவில்லாமல் இசைத்துக்கொண்டே இருக்கிறது.
அதன் ஓசையோ அன்பாய் இருக்கிறது.
அன்பு எல்லா எல்லைகளையும் கடக்கும்போது, உண்மையை அடைகிறது.
எவ்வளவு தூரம் இடையூறில்லாமல் இந்த இசையால்தான் கடக்க முடிகிறது! என வியக்கிறார் கபீர்.
அந்த குழலோசையின் நாதம் ஆயிரம் சூரியனைப்போல் பிரகாசிக்கிறது.
இனிமையான இந்த நாதம் சந்தேகமில்லாமல் சத்ய வீணையின் நரம்பில்
மீட்டப்படும் நாதமே என்கிறார் கபீர்.

Tuesday, December 12, 2006

தமிழில் ஆதிசங்கரரின் ஆத்மபோதம்

ஆதி சங்கரரின் சமஸ்கிருத நூல்களில் ஒன்று ஆத்ம போதம்.

இந்நூலை ரமண மகரிஷி தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது, ஏனெனில்... இந்நூல் உருவான கதையை நீங்களே கேளுங்களேன்:

ஒருநாள் ரமணருக்கு தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்திருந்தன. ஒன்று சமஸ்கிருத மூல ஆத்ம போதம். மற்றொன்று ஆத்ம போதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. சமஸ்கிருதம் சற்றே தெரிந்த ஒரு இஸ்லாமிய தமிழ் அறிஞர்தான் மொழி பெயர்த்திருந்தார்!

ரமணர் அந்த புத்தகங்களை பார்த்துவிட்டு நூலகத்தில் வைக்கச்சொல்லி விட்டார். பின்னர் ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சமஸ்கிருத மூல ஆத்ம போதம் நூலைக் கொண்டு வரச் சொல்லி, அதை கொஞ்சம் படித்துப் பார்த்தார்.

பின்னர் முதல் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாய் எழுதி, அன்பர் ஒருவரிடம் காட்டினார். அவர் அந்த வெண்பாக்களை படித்து விட்டு, மீதமுள்ள 66 சுலோகங்களயும் வெண்பாக்களாக ரமணர் அருளினால் நன்றாக இருக்குமே என்று தன் ஆவலை வெளிப்படித்தினார். அதற்கு ரமணர் 'ஆமாம், ஆமாம், எதற்கு இதெல்லாம்?' என்று மட்டுமே சொன்னார்.

பின்னர் இரண்டு நாள் கழித்து இன்னமும் சில சுலோகங்களையும் பாக்களாக எழுதி இருந்தார் ரமணர். "எழுதாமல் அமைதியாய் இருக்கலாம் என்றால் இயலவில்லை. ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று - என தானே ஒவ்வொரு வெண்பாவாக வெளியே வந்து என் முன் நிற்பது போல இருக்கிறது" என்றாராம்!. இப்படியாக, சில தினங்களில் முழு நூலின் 68 சுலோகங்களையும் 68 வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

இப்படித்தான் தமிழில் பாக்களாய் மலர்ந்தது ஆத்ம போதம். ரமணர் தானாகவே எழிதிய புத்தகங்கள் மிகக் குறைவு. அவரவது உள் உந்துதலால் நமக்காக மலர்ந்தது, நமக்கான அருளல்லவோ!

நூலில் இருந்து சில பாக்களும், அதன் விரிவுரைகளும்:

பா 18.

உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

விடவேறாவட்றின் விருத்தி - யுடனே

எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

அவைக்கரசன் போல அறி.

உன் ஆன்மா என்பதாவது - உன் உடலல்ல. உன் அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா - அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை.



பா 19.

கருவிகள் இன்றொழில் காண்தவ விவேகி

கருத்தாண்போன்று ஆன்மாவைக் காண்பான் - துரிதமாய்

ஓடுமே கண்கண்டு உணர்வில் சந்திரனே

ஓடுகிறான் என்பதை யொத்து.

வானில் மேகங்களுக்கு நடுவே ஒளிந்து மறைந்து துரிதமாக சந்திரன் ஓடுவது போல தோற்றம் அளித்தாலும், வேகமாக ஓடுவது மேகங்களே. ஆனால் இதை அறியாத குழந்தைப் பருவத்தினர் சந்திரன் தான் விளையாட்டு காட்டுவதாக நினைப்பர்.

அதுபோல மனதில் தோன்றும் எண்ணங்களும், உடலின் அவையங்களால் உணரப்படும் உணர்வுகளும் ஆன்மாவின் செயல்கள் என்று நினைப்பர், மாயையினால்.



பா 20:

ஞானஒளி ஆன்மாவை எண்ணி உடல்பொறிகண்

மனதாம் புத்திஇவை எண்ணுதமக் - காணாதொழில்

ஆற்றிடும் ஆதித்த னொளியான் மாக்கதொழில்

ஆற்றுவது போற்றிலும் அறி.

உடல், காணும் கருவியாம் கண், மனம், புத்தி ஆகியவை ஆன்மாவின் ஞான ஒளிதனைப் பெற்று தத்தம் செயல்களை நடத்துகின்றன.

இது எதுபோல என்றால் - ஆதித்தன் பகலில் ஒளிரும் போழுது, அதன் ஓளியின் கீழ் மனிதன் செயல்களைச் செய்வது போலவாகுமாம்.

உடலுக்கும் அதன் அவையங்களுக்கும், புத்திக்கும் ஆன்மாவின் ஞான ஒளி குறையக் குறைய, செயல்கள் தீதில் முடியும். இதனால் ஆதவனாம் ஆன்மாவிற்கு ஏதும் பாதகம் இல்லை. செயல்களின் விளைவை உடல்தான் பெறுகிறது.



பா 21:

தேகம் பொறிகடிகாழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதானமாவில் - மோகத்தாற்

கற்பிப்பார் சுத்த வானத்தின் நீலமுதற்

கற்பித்தால் போலக் கருது.

தேகம், அதன் அவையங்கள், அவற்றில் ஒளிரும் குணங்கள், செயல்களின் விளைவுகள் - இவை யாவுமே ஆன்மாவினால் என்று நினைப்பர். இது வானமானது நீல நிறத்திலானதொரு பொருள் என்று எண்ணுவதைப் போலாகும்.

வானம் நீலமாக தெரிந்தாலும் நீலம் வானத்தின் குணமல்ல. பூமியில் இருந்து நாம் பார்க்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் நீல நிறத்தில் பிரிதலினால் வானம் நீலமாய் தெரிகிறது. நம் எந்த ஒரு குணமும் ஆன்மாவின் குணமல்ல.

(பி.கு: வெண்பாக்கள் சீர்களாக அல்லாமல் பிரித்து தரப்பட்டுள்ளது. பிரித்தலினால் பொருளில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி!)

Sunday, December 10, 2006

பாரதி - என் அரசவைக்கவி (மீள்பதிவு)

இன்னோர் வருடம் - உன் பிறந்தநாள் -
எம் மனத்தில் இன்னோர் வருடம் நீ செய்யும் ஆட்சியின் நினைவாய் இந்த மீள்பதிவு.


திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
வழக்கத்திற்கு ஓர் மாற்றாக,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள்:

பாரதி - என் அரசவைக்கவி.
-------------------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என் அவைக்கு அழைத்தேன்,
கவி எழுத.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொரு நாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

Friday, December 08, 2006

ஓம்காரம் - பதஞ்சலி

ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!