Saturday, December 30, 2006

இந்தியர்களின் உலகநோக்கு பற்றியொரு கருத்துக்கணிப்பு

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கேற்ப அன்று தொட்டு இன்று வரை பாரத நாட்டிலிருந்து தங்கள் வாழ்க்கை மேன்மையின் குறிக்கோளிற்காக பல நாடுகளில் தற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் குடியேறி பொருள் ஈட்டுவோர் ஏராளம், ஏராளம்.

இன்றைய உலகத்தின் அக்கரைப்பச்சைகளில் அரசனாக திகழும் அமெரிக்காவிற்கு எப்படியாவது வந்தாக வேண்டும் என்று கனவு கண்டு அதை நிறைவேற்றியவர்களின் எண்ணிக்கை, இன்றைய கணக்குப்படி - 1.2 மில்லியன்!

கணிணித்துறையில் சென்ற பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியர்களின் வருகை அமெரிக்காவில் பெருகுவதற்கோர் வடிகாலாய் வழி வகுத்தது. அதே துறையினர் தங்கள் துறையில் உள்ள அமெரிக்க இந்தியர்களைப்பற்றி ஓர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அதன் முடிவுகளில் இருந்து சில துளிகள் இங்கே:

வளைந்து கொடுக்கும் தன்மையும், புதிய வணிக நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் உலக சந்தையில் வெற்றி பெருவதற்கு முக்கியமான காரணிகளாக தென்படுகின்றன.

உலக நோக்குடன் செயலபடுவதற்கு ஒருவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றார் என்பது முக்கியமில்லாவிட்டாலும், இந்தியர்களிடமும், அமெரிக்கர்களிடமும், ஜப்பனியர்களுமே மற்ற நாட்டவர்களைக்காட்டிலும் அதிகமான உலக நோக்குடன் செயல்படுகிறார்களாம்.

இந்திய கணிணித்துறையினர் தங்களிடம் இருக்கும் காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மையாலேயே உலகச்சந்தையில் மாறிவரும் காலத்திற்கேற்ப தாக்குப்பிடிக்க இயல்வாதாக கருதுகிறார்கள்.

அவர்களின் இந்தியரல்லாத சகாக்களிடம் கேட்டபோது, இந்திய கணிணித்துறையினரிடம் அதிகமான தொழில் நேர்மை காணப்படுவதாக கூறுகின்றனர். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான நேரம் வேலை செய்ய முன்வருவதாகவும், அதில் தாக்குப்பிடிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் முழுதும் படிக்க கீழே உள்ள pdf:

dec06_learning_gmirpaper_anissha_ranjana[1]
dec06_learning_gmi...
Hosted by eSnips

Friday, December 29, 2006

பாடல்: தமிழிசை பாடுகின்ற வானம்பாடி

ராகம் : சிவரஞ்சனி

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!

அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

திருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்
திருவாசம் தன்னில் தமிழிசையே!
திருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்
தெய்வத்தை வசமாக்கும் தமிழிசையே!

(தமிழிசை...)

பூம்பாவைக்கு உயிரை தந்த இசை - பொங்கும்
புனலினையே எதிர்த்து வந்த இசை!
பாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்
பரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை!

(தமிழிசை...)

பத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக் கேட்கலாம்!

Thursday, December 28, 2006

தமிழில் ஆத்ம போதம் - பகுதி 2

சென்ற பகுதியை தொடர்ந்து, இந்த பகுதியில் மேலும் சில சுலோகங்களைத் தருகிறேன். படித்தவற்றில் என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் இயம்புகிறேன். பிழைகள் இருப்பின் பொருத்தருளவும்.

22.

ஓடும் தெளிந்த நீரில் தெரியும் வானமும், நிலவும் பார்ப்பதற்கு நகர்ந்து நீரில் ஓடுவதாக
அறியாதார் கொள்வார். அதுபோல மனதின் போக்கு, விருப்பம் மற்றும் குறைபாடுகளுக்கு ஆன்மாவே காரணம் என்று தவறாக கொள்வார் அறியாதவர். மனமானது - நீரில் தெரியும் நிலா, நிஜமான நிலாவான ஆன்மா அல்ல, அதன் பிம்பமே.

23.

விருப்பம், ஆசை, துன்பம், இன்பம், வலி, ஓய்வு ஆகியவை மனம் செயல்படும் வரைதான்.
ஆழ்ந்த கனவுகளற்ற தூக்கத்தில் அவையெல்லாம் உணர இயலாதவை, ஏனென்றால் அப்போது மனம் செயல்படுவதில்லை.
ஆகவே, இவையெல்லாம் மனதின் உணர்வுகள் தானே தவிர, ஆன்மாவுடையது அல்ல.

24.
அப்படியானால் ஆன்மா எப்படிப்பட்டது?

என்றென்றும் நிலையானது.
தூய்மையானது.
நிதர்சனமானது.
சித் ஆனது.
ஆனந்தம் ஆனது.

இவையெல்லாம் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்ல முடியாது.
இவை சூரியனின் ப்ராகசத்தையும், சதாரண தண்ணிரின் குளுமையும், நெருப்பின் வெம்மையும் போல -
இயற்கையாக இயைந்து இருப்பன ஆன்மாவிற்கு.
இவையெல்லாம் எப்போதும் சற்றும் குறைவில்லாமல் இருந்து வருவன.
மாயையினால் ஆன்மாவின் உண்மை நிலையை நம்மால்தான் உணர்ந்து கொள்ள இயலவில்லை.

25.
மனம் மாறும் தன்மை உடையது.
ஆன்மாவோ மாறாத் தன்மை கொண்டது.
மனதால் 'நான் எல்லாம் அறிந்து கொண்டேன்' என்று நினைப்பதால், மனம் ஆன்மாவின் நிலையை அடைய இயலாது.

26.
என்றும் விகாரமில்லாதா ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றி அதேயென்றாலும் ஒன்றிய
ஜீவனே எல்லாமெனத் தெரிவான்செய்வான் காண்பான்
பாவத் தான்மாயோகி பார்.


என்றும் மாறுதல்களை அடையா ஆன்மாவும், தன் புத்தியும் சரிநிகர் என தவறாக அறிவான்.
ஒருவருடைய அறிவும், மனதின் எண்ணங்களும் இடம், நேரம் போன்றவைகளால்
வரையுருக்கப்பட்டது. ஆனால் ஆன்மாவே எல்லையில்லாத் தன்மையுடையது.

ஜீவன் தன் மனதில் சித்தின் பிம்பத்தினால், ஆன்மாவின் குணங்கள் எல்லாம்
மனதில் பிம்பத்திலும் தெரிவதால், இரண்டும் ஒன்றென - தவறாக நினைக்கிறான்.

27.
தன்னைத்தான் ஜீவனைத் தாம்பிலே பாம்புபோல்
எண்ணியே அச்சமுறுகின்றான் - தன்னைத்தான்
ஜீவனால் அன்யபரமன் ஆன்மாவென்று
தெரிந்ததனால் அவன் ஞானியாவான்.


சுருண்டு இருக்கும் தாம்புக்கயிற்றைப் பார்த்து பாம்மென்று திகில் கொள்வான் அறிவிலியான்.
ஆன்மாவை ஜீவன் என்று நினைப்பாரும் அவ்வாறே அஞ்சுவார். ஆன்மா ஜீவனல்லா, பிரம்மம் என்று நினைப்பாருக்கு அந்த பயம் இல்லை.

இரண்டு என்று கொள்வாருக்குத்தான் பயமெல்லாம். இரண்டு என்பதே இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று.

Monday, December 25, 2006

மன ஊஞ்சல்

கபீரின் அமுதகவி மொழிகளில் மன ஊஞ்சல். ஆங்கில மொழியாக்கம் : ரபீந்திரநாத் தாகூர்

மன ஊஞ்சல்

Between the poles of the conscious and uncoscious, there has the mind made a swing:

Thereon hang all beings and all worlds, and that swing never ceases its sway.

Millions of beings are there: the sun and moon in their courses are there:

Millions of ages pass, and the swing goes on

All swing! the sky and the earth and the air and the water; and the Lord himself taking form:

And the sight of this made Kabir a servant.


தன் அறிவிற்கும், அறியாமைக்கும் இடயே உழலும் மன ஊஞ்சலில் -
இந்த உலகமும், ஏன் எல்லா உலகங்களும் ஆடுகின்றன.
இதே ஊஞ்சலில் உருவமே இல்லாத அரூபியான இறைவனும்
தனக்கென உருவம் கொள்கிறானே என வியக்கிறார் கபீர்.


அவன் குழலோசை

The flute of the Infinite without ceasing, and its sound is love:

When love renounces all limits, it reaches truth.

How widely the fragrance spreads! It has no end, nothing stands in its way.

The form of this melody is bright like million sons:

incomparably sound the vina, the vina of the notes of truth.


அடிமுடி இல்லாத அவன் குழலோசை முடிவில்லாமல் இசைத்துக்கொண்டே இருக்கிறது.
அதன் ஓசையோ அன்பாய் இருக்கிறது.
அன்பு எல்லா எல்லைகளையும் கடக்கும்போது, உண்மையை அடைகிறது.
எவ்வளவு தூரம் இடையூறில்லாமல் இந்த இசையால்தான் கடக்க முடிகிறது! என வியக்கிறார் கபீர்.
அந்த குழலோசையின் நாதம் ஆயிரம் சூரியனைப்போல் பிரகாசிக்கிறது.
இனிமையான இந்த நாதம் சந்தேகமில்லாமல் சத்ய வீணையின் நரம்பில்
மீட்டப்படும் நாதமே என்கிறார் கபீர்.

Tuesday, December 12, 2006

தமிழில் ஆதிசங்கரரின் ஆத்மபோதம்

ஆதி சங்கரரின் சமஸ்கிருத நூல்களில் ஒன்று ஆத்ம போதம்.

இந்நூலை ரமண மகரிஷி தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது, ஏனெனில்... இந்நூல் உருவான கதையை நீங்களே கேளுங்களேன்:

ஒருநாள் ரமணருக்கு தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்திருந்தன. ஒன்று சமஸ்கிருத மூல ஆத்ம போதம். மற்றொன்று ஆத்ம போதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. சமஸ்கிருதம் சற்றே தெரிந்த ஒரு இஸ்லாமிய தமிழ் அறிஞர்தான் மொழி பெயர்த்திருந்தார்!

ரமணர் அந்த புத்தகங்களை பார்த்துவிட்டு நூலகத்தில் வைக்கச்சொல்லி விட்டார். பின்னர் ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சமஸ்கிருத மூல ஆத்ம போதம் நூலைக் கொண்டு வரச் சொல்லி, அதை கொஞ்சம் படித்துப் பார்த்தார்.

பின்னர் முதல் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாய் எழுதி, அன்பர் ஒருவரிடம் காட்டினார். அவர் அந்த வெண்பாக்களை படித்து விட்டு, மீதமுள்ள 66 சுலோகங்களயும் வெண்பாக்களாக ரமணர் அருளினால் நன்றாக இருக்குமே என்று தன் ஆவலை வெளிப்படித்தினார். அதற்கு ரமணர் 'ஆமாம், ஆமாம், எதற்கு இதெல்லாம்?' என்று மட்டுமே சொன்னார்.

பின்னர் இரண்டு நாள் கழித்து இன்னமும் சில சுலோகங்களையும் பாக்களாக எழுதி இருந்தார் ரமணர். "எழுதாமல் அமைதியாய் இருக்கலாம் என்றால் இயலவில்லை. ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று - என தானே ஒவ்வொரு வெண்பாவாக வெளியே வந்து என் முன் நிற்பது போல இருக்கிறது" என்றாராம்!. இப்படியாக, சில தினங்களில் முழு நூலின் 68 சுலோகங்களையும் 68 வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

இப்படித்தான் தமிழில் பாக்களாய் மலர்ந்தது ஆத்ம போதம். ரமணர் தானாகவே எழிதிய புத்தகங்கள் மிகக் குறைவு. அவரவது உள் உந்துதலால் நமக்காக மலர்ந்தது, நமக்கான அருளல்லவோ!

நூலில் இருந்து சில பாக்களும், அதன் விரிவுரைகளும்:

பா 18.

உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

விடவேறாவட்றின் விருத்தி - யுடனே

எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

அவைக்கரசன் போல அறி.

உன் ஆன்மா என்பதாவது - உன் உடலல்ல. உன் அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா - அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை.



பா 19.

கருவிகள் இன்றொழில் காண்தவ விவேகி

கருத்தாண்போன்று ஆன்மாவைக் காண்பான் - துரிதமாய்

ஓடுமே கண்கண்டு உணர்வில் சந்திரனே

ஓடுகிறான் என்பதை யொத்து.

வானில் மேகங்களுக்கு நடுவே ஒளிந்து மறைந்து துரிதமாக சந்திரன் ஓடுவது போல தோற்றம் அளித்தாலும், வேகமாக ஓடுவது மேகங்களே. ஆனால் இதை அறியாத குழந்தைப் பருவத்தினர் சந்திரன் தான் விளையாட்டு காட்டுவதாக நினைப்பர்.

அதுபோல மனதில் தோன்றும் எண்ணங்களும், உடலின் அவையங்களால் உணரப்படும் உணர்வுகளும் ஆன்மாவின் செயல்கள் என்று நினைப்பர், மாயையினால்.



பா 20:

ஞானஒளி ஆன்மாவை எண்ணி உடல்பொறிகண்

மனதாம் புத்திஇவை எண்ணுதமக் - காணாதொழில்

ஆற்றிடும் ஆதித்த னொளியான் மாக்கதொழில்

ஆற்றுவது போற்றிலும் அறி.

உடல், காணும் கருவியாம் கண், மனம், புத்தி ஆகியவை ஆன்மாவின் ஞான ஒளிதனைப் பெற்று தத்தம் செயல்களை நடத்துகின்றன.

இது எதுபோல என்றால் - ஆதித்தன் பகலில் ஒளிரும் போழுது, அதன் ஓளியின் கீழ் மனிதன் செயல்களைச் செய்வது போலவாகுமாம்.

உடலுக்கும் அதன் அவையங்களுக்கும், புத்திக்கும் ஆன்மாவின் ஞான ஒளி குறையக் குறைய, செயல்கள் தீதில் முடியும். இதனால் ஆதவனாம் ஆன்மாவிற்கு ஏதும் பாதகம் இல்லை. செயல்களின் விளைவை உடல்தான் பெறுகிறது.



பா 21:

தேகம் பொறிகடிகாழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதானமாவில் - மோகத்தாற்

கற்பிப்பார் சுத்த வானத்தின் நீலமுதற்

கற்பித்தால் போலக் கருது.

தேகம், அதன் அவையங்கள், அவற்றில் ஒளிரும் குணங்கள், செயல்களின் விளைவுகள் - இவை யாவுமே ஆன்மாவினால் என்று நினைப்பர். இது வானமானது நீல நிறத்திலானதொரு பொருள் என்று எண்ணுவதைப் போலாகும்.

வானம் நீலமாக தெரிந்தாலும் நீலம் வானத்தின் குணமல்ல. பூமியில் இருந்து நாம் பார்க்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் நீல நிறத்தில் பிரிதலினால் வானம் நீலமாய் தெரிகிறது. நம் எந்த ஒரு குணமும் ஆன்மாவின் குணமல்ல.

(பி.கு: வெண்பாக்கள் சீர்களாக அல்லாமல் பிரித்து தரப்பட்டுள்ளது. பிரித்தலினால் பொருளில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி!)

Sunday, December 10, 2006

பாரதி - என் அரசவைக்கவி (மீள்பதிவு)

இன்னோர் வருடம் - உன் பிறந்தநாள் -
எம் மனத்தில் இன்னோர் வருடம் நீ செய்யும் ஆட்சியின் நினைவாய் இந்த மீள்பதிவு.


திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
வழக்கத்திற்கு ஓர் மாற்றாக,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள்:

பாரதி - என் அரசவைக்கவி.
-------------------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என் அவைக்கு அழைத்தேன்,
கவி எழுத.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொரு நாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

Friday, December 08, 2006

ஓம்காரம் - பதஞ்சலி

ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!

Sunday, November 19, 2006

பாதி மதி நதி...

சமீபத்தில் கேட்ட திருப்புகழ் பாட்ல்.

கேட்ட பொழுது முதல் நெஞ்சை விட்டு நீங்கா பாடல்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

பாடல் வரிகள்:

(பாடல் வரிகள் சீர்களாக அல்லாமல் படிப்பதற்கு எளிதான சொற்களாக)

பாதி மதி நதி போதும் அணி சடை

நாதன் அருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா

காதும் ஒருவிழி காகம் உற

அருள் மாயன் அரி(ஹரி) திரு மருகோனே

காலன் எனை அணுகாமல்

உனதிரு காலில் வழிபட அருளாயே

ஆதி அயனோடு தேவர்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினில் ஏறி

அமரர்கள் சூழவலம்வர வரும் இளையோனே

சூத மிகவளர் சோலை மருவும்

சுவாமிமலைதனில் உறைவோனே

சூரன் உடல் உற வாரி சுவரிட

வேலை விடவல பெருமாளே.

பாடலைக் கேட்க

Wednesday, October 04, 2006

Give me Peace

சிப்ரியானோ டீ ரோர் என்ற 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய இசையமைப்பாளரின் 'Datemi pace' என்ற புகழ்பெற்ற பாடலின் பாடல் வரிகளின் ஆங்கில வடிவம்.

Give me Peace
-------------

Give me peace, oh my jarring thoughs.
Its not enough that Love, Fate and Death
wage war all about me, and at my very gates,
without finding other enemies within?

And you, my heart, are you still as you were?
Disployal to me alone; for you harbor fierce spies,
and have allied yourself with my enimies, bold as they are.

In you love reveals secret messages,
In you hate boasts all her triumphs,
and Death awakens the memory of that blow
which must surely destroy all that remains of me;

In you gentle thoughts arm themselves lies;
Wherefore I charge you alone
guilty of all my ills.

Tuesday, June 27, 2006

ஆறு

ஆறு பேரில் ஒருவராக அழைக்கப்பட்டவர் - கார்த்திகேயன் - தன் 'ஆறு' பதிவில் - என் பெயரையும் அழைக்க - அதனால் இந்த ஆறு பதிவு. அழைப்புக்கு நன்றி கார்த்திகேயன்.

ஒரு சில 'ஆறு' பதிவுகளை படித்திருந்தாலும், இதுவரை ஆறு என்று பதிய யோசிக்கவில்லை. அதனால் அதிகம் யோசிக்காத உடனடி பதிவாகி விட்டது.

இந்தியாவில் பிடித்த ஆறு
புதுச்சேரி
திருவனந்தபுரம்
கேரளக் கடற்கரை
மும்பை நரிமன் பாய்ண்ட்
ஹைதராபாத்
்திருப்பதிதிருப்பதிதமிழ்நாடுதமிழ்நாடுதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பிடித்த ஆறு
கூட்டமில்லாத கோவில்கள்
விண்ணைத் தொட்டு நிற்கும் கோபுரங்கள்
ஆள் அரவமற்ற நூலகங்கள்
புதிய ஊர்களுக்கு பேருந்துப் பயணம்
திருடு போகாத ஆற்று மணல்
இலக்கிய ஆர்வம்

தமிழகத்தில் பிடிக்காத ஆறு
மொழி அரசியல்
ஹிந்தி எதிர்ப்பு
இலங்கை அகதிகள் நிலை
பார்முலா திரைப்படங்கள்
விளையாட்டுத் துறையில் கவனமின்மை
சுற்றுப்புற சூழல் மாசு

கர்நாடக சங்கீத வாய்ப்பாடகர்களில் ஆறு
பாம்பே ஜெயஸ்ரீ
நித்யஸ்ரீ மஹாதேவன்
சுதா ரகுநாதன்
விஜய் சிவா
டி.எம்.கிருஷ்ணா
மதுரை டி.என்.சேஷகோபாலன் (ஹரிகதை)

தமிழ் பின்னணி பாடகர்கள்களில் ஆறு
எஸ்.பி.பி
உன்னி கிருஷ்ணன்
ஹரிணி
ஜேசுதாஸ்
சித்ரா
கார்த்திக்

சமீபத்தில் வியந்து படித்த பதிவுகளில் ஆறு
ஜி.ரா
சுகா
குமரன்
எஸ்.கே
வெற்றி
நேசகுமார்


சரி, போதும் இந்த விளையாட்டு, ஆறு பேரை அழைச்சிடலாமா...

முத்து
வாசன்
ராம்கி
என்றென்றும் அன்புடன் பாலா
பொன்ஸ்
தருமி

Tuesday, June 20, 2006

இன்று கேட்ட இரண்டு பாடல்கள்

இன்று அலுவலகத்தில் வேலையின் ஊடேயே தூள்.காம் -இல் பாடல்கள் கேட்கக் கிடைத்தது.

இதுபோன்ற சமயங்களில் இதுவரை கேளாமல்போன பாடல்களை கேட்டுப்பார்ப்பது வழக்கம்.

இவற்றில் மிகப்பழைய பாடல்களும், இடைக்காலப் பாடல்களும் அதிகம்.

இன்று கேட்ட பாடல்களில் - இந்த இரண்டு பாடல்களும் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

இரண்டிலுமே பெண் பாடகி ஸ்வர்ணலதா.

முதல் பாடல்:
ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஜெயசந்திரன், ஸ்வர்ணலதா
படம்: பொண்ணுக்கேத்த புருஷன் (!!!:-))

இரண்டாவது:
நான் ஏரிக்கரை மேலிருந்து
கே.ஜே.ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
படம்: சின்னத்தாயி

பாடல் சுட்டிகளுக்கு dhool.com் க்கு நன்றி.

Sunday, June 18, 2006

நிஜ பொன்னியின் செல்வன் ?

கார்த்திகேயனின் வலைப்பூவில் மறுமொழியாய் இடவேண்டியது - கொஞ்சம் பெரிதாய் போய் விட்டதால் - தனிப் பதிவு். (ஹே...ஹே...)

இது எப்படி இருக்கு?

பொ. செல்வன் - மாதவன்

வந்தியத்தேவன் - சூர்யா

ஆ கரிகாலன் - விக்ரம்

சேந்தன் அமுதன் - ஸ்ரீகாந்த்

ஆழ்வார்கடியான் - திலீப் (நன்றி - கார்த்திகேயன்)

குந்தவை - ஸ்நேகா

பூங்குழலி - மீரா ஜேஸ்மைன்

நந்தினி - சதா

வானதி - அஸின்

சு.சோழர் - கமல் (நன்றி - ஜி. ராகவன்)

பெ. பழுவேட்டையார் - நாசர்

சி. பழுவேட்டையார் - பிரகாஷ்ராஜ்

கந்தமாறன் - பசுபதி


இன்றைய நடிகர்களில் யார் இந்த பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றொரு அனுமானமே இது. நடைபெற சாத்தியம் இல்லாவிட்டாலும் - கற்பனையாவது செய்து பார்ப்போமே!

இவ்வளவு முக்கிய பாத்திரங்கள் (நடிகர்கள் அல்ல)் அமையப்பெற்ற கதை கொண்ட திரைப்படம் ஏதும் இதுவரை வந்திருக்காது என நினைக்கிறேன்!

Thursday, June 08, 2006

ஸ்ரீமத் ஸ்வாமி வீரேஸ்வரானந்தா

பெங்களூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஸ்வாமி வீரேஸ்வரானந்தா பற்றிய புகைப்படத்தொகுப்பு - கூடவே ராமகிருஷ்ண மடத்திலிருந்து வாசகங்கள் - பின்னணியில் சிதார் இசை.


SrimatSwamiVireswarananda.pdf
Powered by Castpost

Saturday, June 03, 2006

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு, ஆனால்...

ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாய் வளர்ந்தோம்.

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு என்றார்கள்.

ஆனால் இடையில் இட ஒதுக்கீடு...

ஒருவனுக்கு படித்தாலும் வேலை இல்லை.

ஒருவனுக்கு படிக்காவிட்டாலும் வேலை.

இப்போதுதான் சொல்கிறார்கள்,

படித்தால் மட்டும் போதாது,

'சரியான' சாதியில் பிறந்திருக்க வேண்டுமாம்.

அடடா, இது அப்போதே தெரிந்திருந்தால்,

வேறு 'உயர்த்தப்பட்ட' சாதியில் பிறந்திருக்கலாமே...!

Sunday, May 07, 2006

தேர்தல் 2006 - உங்கள் வாக்கு யாருக்கு?

தேர்தல் களம் சூடு பிடித்து தேர்தலும் நெருங்கியாகி விட்டது. கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள்தான் வாக்குறுதிகளை சகட்டுமேனிக்கு அள்ளி விடுவார்கள். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளே 'மொத்த' அளவில் வாக்காளர்களில் தலைகளை சிரைப்பதென முடிவு செய்து, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகின்றன. திராவிட கட்சிகள் சென்ற தேர்தல்களில் 'அலை'களில் உதவியிலேயே ஆட்சியை பிடித்துவிட்டதால், அவர்களுக்கு புதிதான யுக்தி ஏதும் தோன்றவில்லை. தேசிய கட்சிகளோ, திராவிட கட்சிகளை நம்பியே காலம் தள்ளி விட்டதால் மூளை மங்கிப்போய், ஏதோ நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என்கிறார்கள்.

இந்த நிலமையில் யாருக்கு வாக்களிப்பது என்று கட்சி சாராத சராசரி வாக்காளன் பெரிதும் குழம்பிப்போய் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கட்சிகளுக்கும் பெரிதும் வித்யாசம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்னும் கேலிச்சித்திரம் 80-களில் விகடனில் பார்த்த நினைவு வருகிறது. இன்னமும் நிலமை சற்றும் மாறவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த கட்சித் தொண்டர்களோ சென்ற முப்பது ஆண்டுகளில் இரு கட்சிகளின் மத்தியில் ஏற்பட்ட வன்மங்களின் நினைவிலேயே இன்னமும் ஊறிப்போய், இன்றைய நிலமை என்ன என்று யோசிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.

வாரிசு அரசியலை குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து பிரிந்து புதுக்கட்சி தொடங்கிய தலைவர் ஒருவர் இன்னொரு கட்சியில் கூட்டு சேர்வதால் தானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்கிறார். புதிதாக அரசியலில் குதித்திருக்கும் நடிகரோ, எல்லா கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களையும் (அப்படி 'ஒன்று' இல்லாவிட்டாலும்) கலந்துகட்டி, 'தான் இதிலும் நடிகன் தான்' என்கிறார். அரசியல் கட்சிகளாய் மாறிப்போன ஜாதி சங்கங்களின் ஆதிக்கம், தேர்தல் என்றால் திருவிழா என்று மட்டுமே நினைக்கும் அப்பாவி மக்களிடம் குறைந்து போயிருப்பது இந்த தேர்தலில் பாராட்ட வேண்டியது. ஆனால், இதை சாக்கிட்டு ஏனைய கட்சிகள் தங்களை அவர்களின் தனிப்பொரும் பிரதிநிதியாக காட்டிக் கொள்கின்றன.

இந்த நிலமையில் உங்கள் வாக்கு யாருக்கு?
தற்போதைய முதலமைச்சர் சென்ற பாரளுமன்றத் தேர்தல் தோல்வியின் பின், தோல்விக்கான காரணமாய் வாக்குகள் கணக்கெடுக்கும் இயந்திரத்தை குறை சொல்கிறார். என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கள்!. முதலைமைச்சரையோ, முக்கிய அமைச்சர்களையோ நம்பி வாக்களிக்காதீர்கள். இத்தனை நாளில் திருந்தாத அவர்கள் இனிமேலுமா திருந்தப்போகிறார்கள்?. கட்சிகளை நம்பிப் பயனில்லை. அவர்கள் இலவச வாக்குறுதிகளை நம்பிப் பயனில்லை.

என்ன செய்யலாம்?
தலைமையையோ, கட்சியையோ தேர்வு செய்யாமால், உங்கள் வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சுயேச்சையாக இருந்தாலும் பாதகமில்லை.

உங்கள் வேட்பாளர்களில் யார் நியாயமான நபர் என்று பாருங்கள்.

யார் பாரபட்சமன்றி அனைத்து தரப்பு மக்களின் சரியான பிரதிநிதியாக செயல்படுவார் என்று தீர்மானியுங்கள்.

அவ்வளவே. முதலில் நியாயமான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். பின் அவர்களாகவே, அவர்களின் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள். சரியான அரசியல் பாதைக்கு வழி வகுப்பார்கள். முதலில் வித்திடுவோம்.

இவையெல்லாம் வாக்களிக்கும் உங்கள் கையில்தான் உள்ளது. இத்தனைநாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள். தேர்தல் களத்தில் முக்கியமானவர்கள் வாக்களர்களும், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும்தான். கட்சி சார்போ, கூட்டணியோ அல்லது தலைமையோ அல்ல.

Saturday, April 22, 2006

விண்டோஸில் மேக் வடிவம்

ஆப்பிளின் பூட் கேம்ப் அறிவிக்கப்பட்டு சில வாரங்களாகி விட்டது. ஆப்பிளின் மேக் கம்பூயூட்டர்களின் Windows XP தரவிரக்கம் செய்து கொள்ள வழி வகை செய்துள்ளது. இந்த செய்தி இரண்டு வகையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. விண்டோஸை வெறுப்பவர்கள் - எதற்காக விண்டோஸ் தேவைப்படும் என்றும், விண்டோஸ் விசுவாசிகள் - ஆப்பிளிலும் விண்டோஸ் தேவைப்படுகிறது என்ற பெருமிதமும்.

இது இப்படி இருக்க, நாம் ஏன் நம் விண்டோஸுக்கு மேக் வடிவம் கொடுத்தாலென்ன என்று தோன்றியது...

இதற்கானதொரு மென்பொருளை சோதனை செய்து பார்த்தேன்.

Windows Blinds எனதாகப்பட்டது. இந்த மென்பொருள் உங்கள் விண்டோஸ் ஐகான்களுக்கு பதிலாக மேக்கில் பயன்படுத்தப்படும் ஐகான்களை நிறுவுகிறது. அனைத்து விண்டோஸ் விண்டோக்களுக்கும் மேக்கில் உள்ளதுபோல் தெரியும். விண்டோஸில் கிடைக்கும் ஒருசில skin களுக்கு மாற்றாக, இங்கு விதவிதமான மாற்று skin களை மாற்றிக்கொள்ளலாம். இதனுடன் வரும் Object Dock எனும் மென்பொருள் மேக்கில் வரும் டாக்கிங் முறையை செயல்படுத்துகிறது.
நிறுவுதல் எளிதாகத்தான் இருந்தது.
செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும், பின்வரும் இடையூறுகளால் இந்த மென்பொருள் பிடிக்காமல் போனது!
* தற்போது செயல்பாட்டில் இல்லாத ஏனைய விண்டோக்களின் தலைப்பு சரியாகத் தெரிவதில்லை.
* விண்டோக்களின் தலைப்பு தமிழ் யுனிகோட் எழுத்துருவில் இருந்தால், அதற்கு பதிலாக கேள்விக்குறிகள் தான் காட்டுகிறது.
* ஒவ்வொருமுறை பூட் செய்யும்போதும், இந்த மென்பொருளை வாங்குகிறீர்களா என கேட்டு தொல்லை செய்கிறது.
* மைக்ரோஸாப்ட் வோர்ட் போன்ற மென்பொருள்கள் தொடங்கும்போது அந்த விண்டோ மேலும் கீழுமாக போய்வருகிறது.

இந்த காரணங்களால், இந்த மென்பொருளை இப்போது நீக்கி விட்டேன். ஆனால் ஐகான்களை அப்படியே விட்டுள்ளது. இதனால் பாதகம் ஏதும் இல்லை. புதியதோர் உருவம் கிடைத்த மகிழ்சியில் இருக்கிறது என் கணிணி, பாவம் அதை ஏன் கெடுப்பானேன்?

யுனித்தமிழில் செய்தித் தளம்?

யுனிகோட் தமிழ் எழுத்துருவில் இயங்கும் செய்தித் தளம் ஏதுமில்லையா? இந்த கணக்கில் பி.பி.சி மற்றும் ஏனைய இலங்கைத்தமிழ் ஊடகங்களைத் தவிர்க்கவும். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் செய்தித்தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்துருவில் *இன்னமும்* இயங்கி வருகின்றன. சின்சவுத் வலைதளம் கூட மாறிவிட்டது, இந்த தளங்கள் இன்னமும் மாறவில்லை.
இவற்றுக்கு மாற்றாக யாரேனும் புதியவர்கள் யுனிகோட் எழுத்துருவில் வந்தால் நன்றாக இருக்கும்.
கூகிளில் தேடியும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் பரிந்துரையுங்களேன்...?

Thursday, April 13, 2006

கணிணி தொடங்கும்போது...

Windows கணிணி தொடங்கும்போது தானாகவே முடுக்கி விடும் startup programs - அதிகமாகிப்போய் - உங்கள் கணிணி மிகவும் தாமதமாக தொடங்குகிறதா? இவற்றைத் தவிர்ப்பது எப்படி?

Widows Registry க்கு சென்று என்கெங்கு தேடி சுத்தம் செய்வது என்று குழப்பமாக உள்ளதா?

எளிதாக இதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

மைக் லின் என்பவரின் Startup Control Panel ஒன்றை பயன்படுத்திப் பார்த்தேன்.
அதன் சுட்டி இங்கே
பயன்படுத்த எளிதான அதன் முகப்பு இப்படி இருக்கும்:


startup Posted by Picasa

Tuesday, March 21, 2006

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம்சோதனைப்பதிவு - கேட்டதை முதல் முறை பதிவு செய்கிறேன்!


Powered by Castpost

Wednesday, January 18, 2006

2005 - டாப் டென் - தமிழ் திரைப்பட பாடல்கள்

2005 இல் வெளிவந்த படங்களில் எனக்கு பிடித்த பத்து பாடல்கள்
-----------------------------------------------------------------------------------
பாடல்களைக் கேட்க, பாடல் தலைப்பின் சுட்டியை கிளிக் செய்யவும். சுட்டிகளின் மூலம் - MusicIndiaOnline.com

1. காற்றில் வரும் கீதமே (ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி) (ஒருநாள் ஒரு கனவு - இளையராஜா)
இனிமையாக இழைந்தோடும் இனியதொரு கீதம். தோராயமான தமிழ் உச்சரிப்புடன் பாடி வந்த ஷ்ரேயா கோஷலுக்கு தமிழ் திரை இசையில் மிகப்பெரும் வாய்ப்பு. அருமையாக பயன்படுத்திக்கோண்டு நன்றாகபாடி இருக்கிறார். இந்த பாடலுக்கும் 'ஜனனி ஜனனி, நிற்பதுவே நடப்பதுவே, நான் என்பது நீ அல்லவோ' போன்ற பாடல்களுக்கும் ஒற்றுமை, இசையமைப்பாளர் இளையராஜா என்பது மட்டுமல்ல, இந்த பாடலும் கல்யாணி ராகம் தான் என்பதும் கூட!. என்றென்றும் நினைவிலும் தொடரும்!. படத்தின் இசைத்தட்டில் இந்த பாடலின் இசையமைப்பு பற்றி இளையராஜாவும், பாடலாசிரியர் வாலியும் விவாதிப்பதுபோல் சேர்த்திருப்பதும் கேட்பதற்கு சுவையாக உள்ளது.

2. கண்ட நாள் முதலாய் (சுபிக்க்ஷா) (கண்ட நாள் முதல் - யுவன் சங்கர் ராஜா)
மதுவந்தியில் கர்நாடக சங்கீதப் பாடல் - அலைபாயுதே பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் பயன் படுத்திக்கொண்டதுபோல், யுவன் இந்த பாடலுக்கு technobeat இல் மெருகேற்றி இருக்கிறார். முதல் இடையீட்டில் (interlude) வரும் புல்லாங்குழல், இரண்டாவது இடையீட்டில் வரும் சேக்ஸோபோன் மனதில் வசந்தம் வரச்செய்கிறது. பாடகர் சுபிக்க்ஷா புதுவரவு போலும்?. ஒரு சில இடங்களில், வேறு பெரிய பாடகர் இன்னமும் நன்றாக பாடியிருக்கலாமே என்று சொல்லச்சொன்னாலும், பாடல் இனிமையாக உள்ளது.

3. சுட்டும் விழிச்சுடரே (ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ) (கஜினி - ஹேரிஸ் ஜெயராஜ்)
பாடலின் தொடக்கத்தில் என்ன இப்படித் தொடங்குகிறது என நினைக்கவைத்தாலும், முதல் இடையீட்டிற்கு பின்னால், வேகம் பிடிக்க, மனதுக்கும் பிடிக்கிறது. அதற்கப்பறம் என்ன, ஹம் செய்ய சொல்கிறது மனது. ஸ்ரீராம் பார்த்தசாரதியா என வியக்க வைத்த பாடல். ஸ்ரீராமின் குரல் பல்லவியைக்காட்டிலும் சரணங்களில் மாறுதலாகவும் இனிமையாகவும் இருக்கிறது!. இந்த பாடலிலும் சேக்ஸோபோன் இழைந்தோடுகிறது!

4. அன்பு அலைபாயுதே (உன்னி கிருஷ்ணன், ரேஷ்மி, கார்த்திக்) (ப்ரியசகி - பரத்வாஜ் )
படத்தில் டைட்டில் பாடலாக வந்தாலும், பரத்வாஜின் ஏற்கனவே வந்த 'டட்டடா' ட்யூன் இந்த பாடலிலும் வந்தாலும், பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. முடிவில், வேறென்ன வேண்டும்?
'இன்பத்தை கருவாக்கி
இரு கண்ணை மகனாக்கி
பதினாறும் எனக்கருளினாய்,
இறைவா,உனக்கென்ன நான் செய்வேன்?
உயிரன்றி வேறில்லை, உன் பாதம் சமர்ப்பிக்கவே' என்ற வரிகளும் நன்றாக இருந்தன.

5. இளமை என்பது கனவின் (கார்த்திக் ராஜா) (ரைட்டா தப்பா - கார்த்திக் ராஜா)
சோகப்பாடலானாலூம், உருக்கத்தில் நெஞ்சை உருக்குகிறது. அதுவும் பாடலில் வேகம் அதிகரிக்க, மனதிற்கு இதமாக இருக்கிறது. கார்த்திக் ராஜாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், இந்த பட ஆல்பம் நன்றாக செய்திருக்கிறார். இதே ஆல்பத்தில், இன்னொரு பாடலும் (யாரிடம் சொல்வேன்...) கேட்பதற்கு நன்றாக இருகிறது.

6. உன்னைச் சரண் (கல்யாணி,ப்ராணா) (தவமாய் தவமிருந்து - சபேஷ்-முரளி)
பியானொ வாசிப்புடன் துவங்கி, பின்னர் பல்லவி மெதுவாய் வாசிக்கப்பட்டு, பின்னர் பாடல் துவங்குகிறது. இடையீடுகளில் இசைக்கருவிகளின் இனிமை செவிகளில் தேன். கனமான படத்தில், இதமானதொரு பாடல். மெலடியும், ரிதமும் அழகாய் இணைகிறது.

7. காலை அரும்பி (கல்யாணி, ஸ்ரீநிவாஸ்) (கனா கண்டேன் - வித்யாசாகர்)
வித்யாசாகரின் மெலடிகள் எப்போதுமே கேட்பதற்கு இனிமையானவை. முதல் இடையீட்டில் வரும் புல்லாங்குழல் மற்றும் வயலின் பாடலில் இனிமை சேர்க்கின்றன. ஸ்ரீநிவாஸ், கல்யாணி -இன் குரல் புல்லாங்குழலோடு போட்டி போடும் அளவிற்கு இனிமையாக இருகிறது.

8. பூ பூத்தது யாரதை (சோனு நிகம், சாதனா சர்கம்)(மும்பை எக்ஸ்பிரஸ் -இளையராஜா)
இனிமையான பாடல். சில இடங்களில் உச்சரிப்புகள் அன்னியமாய் தெரிந்தாலும், சோனு நிகம், சாதனா சர்கம் நன்றாகவே பாடி இருக்கிறார்கள். பாடலில் பயன்படுத்தியுள்ள இசைக்கருவிகள் (டிரம்ம்பட், ட்ரம்ஸ், ஸேக்ஸோபோன்) ஜாஸ் இசையை கேட்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பாடலில் மட்டுமல்லாமல், ஆல்பத்தின் மற்ற பாடல்களிலும் இதைக் காணலாம். இதனாலேயே, இளையராஜாவின் வித்யாசமான ஆல்பம் இதுவென சொல்லலாம்.

9. ஐயங்காரு வீட்டு அழகே (ஹரிஹரன், ஹரிணி) (அன்னியன் - ஹேரிஸ் ஜெயராஜ்)
சிறந்த சூப்பர் டூப்பர் பாடல் எனலாம் இந்த பாடலை. பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'ஜகத்தா' வில் தொடங்கி பின்னர் பல்லவி தொடங்குகிறது. இரு பாடகர்களும் சர்வ சாதாரணமாக பாடி அசத்தி இருக்கிறார்கள். ஹரிஹரன், 'ஐயங்காரு...' என இழுக்கும் இடங்கள் பிடித்திருந்தன. நாட்டை ராகத்தில் அமைந்திருக்கிறது இந்த பாடல். (இருவர் படத்தின் 'நறுமுகையே' பாடலிலும் நாட்டையைப் பார்க்கலாம்)

10. கேக்கலையோ கேக்கலையோ (மஞ்சரி, டிப்பு) (கஸ்தூரி மான் - இளையராஜா)
'கேக்கலையோ' என்று துவங்கும் இடம் வித்யாசமாக இருக்கிறது. எளிதாக, கேட்டவுடன் ஹம் செய்ய வைக்கும் பாடல்.