Sunday, December 25, 2005

மரபணுவியல் செய்திகள்

செய்திகள் வாசிப்பது ஜீவா!

ஓட்டப்பந்தையங்களில் கென்யாவைச் சேர்ந்தவர்களும், எத்தியோப்பியர்களும் - பொதுவாக ஆப்ரிக்க இனத்தினவர் முண்ணணியில் வருவது உங்களுக்கு தெரியும். முயன்றால் முடியாதது இல்லை என்றாலும், ஆப்பரிக்கர்களின் மரபணுவிலேயே ஏதாவது எழுதி வைத்து இருக்கிறதா என்றால் - 'ஆமாம்' என்கிறார்கள் - சமீபத்திய ஆய்வில் கிளாஸ்கோ பல்கலைக்கழக மரபணு ஆராய்சியாளர்கள். அவர்கள் ஆய்வு செய்த ஆப்ரிக்கர்களில் - அவர்களுக்கு நான்கு மரபணுக்களில் மாறுதல்கள் இருக்கிறதாக சொல்கிறார்கள். மாறுதலில் பொதுவானதொரு mutation ஏதும் இல்லாவிட்டாலும், மரபணு வகைகளில் ஏற்படும் கூட்டணிதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு 10 வயது அதிகமாகிறதாம். அது சரி, அதெப்படி கணக்கிட்டார்கள் என்கிறீர்களா? கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது பற்றி ஆராய்ந்தது. முதலில் கொஞ்சம் முன்னுரை: ஒவ்வொரு குரோமசோமின் முனைகளிலும் 'டீலோமியர்' என்கிற டி.என்.ஏ இருக்கும். ஒவ்வொரு முறை செல் உடைந்து குட்டி செல்கள் உருவாகும்போதும் இந்த டீலோமியரின் நீளமும் குறைந்துபோகும். சிறிய வயதுள்ளவர்களில், 'டீலோமிரேஸ்' என்கிற என்சைம்-இன் உதவியால், டீலோமியர் வளர்ந்து குரோமசோம்கள் திடமாக இருக்க உதவுகின்றன. ஆக, டீலோமியர் நீளமாக இருக்க, ஒருவரின் குரோமசோம்கள் நீண்ட நாள் தாக்குப்பிடுக்கும், அவர் நீண்ட நாள் வாழலாம். வயதானவர்களில், நீண்ட டீலோமியர் இருப்பவர்கள் நீண்ட நாள் இருப்பார்கள் என்றும், டீலோமியர் அவ்வளவு நீளமாக இல்லாதவர்கள் குறைவான நாட்களே வாழ்வார்கள் என்றும் சொல்லலாம். சரி, இப்போ நம்ம ஆராய்ச்சிக்கு வருவோம். அதிக மன அழுத்தத்துடன் வாழ்ந்த்துவரும் பெண்களை ஆராய்சியில் உட்படுத்தியபோது, அவர்களுக்கு சொல்லி வைத்தார்ப்போல, டீலோமியர்களின் நீளம் குறைவாக காணப்பட்டதாம். கிட்டத்தட்ட 9 முதல் 17 ஆண்டுகால செல் வளர்ச்சியின் (அல்லது தேய்தலின்) அளவிற்கு அந்த தாய்மார்களுக்கு, மன அழுத்தம் காரணமாக செல்களின் அடிப்படையில் வயது குறைந்து போனதாக சொல்லலாம் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

Sunday, December 18, 2005

தேடல்: ஐ-பாட் - முதலிடம்

கிருஸ்துமஸ் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பரிசுப்பொருட்களின் விற்பனையும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு சுவையான தகவல்:

சென்ற ஒரு மாதத்தில் மட்டும் இணைய 'தேடு' தளங்களில் (Search engines), அதிகமாக தேடப்பட்ட பொருள் என்ன தெரியுமா? - விடை: ஆப்பிளின் ஐ-பாட் (I-Pod). 6.6 மில்லியன் தேடல்கள். அதற்குபின், இரண்டாவது இடம்: X-பாக்ஸ் என்கிற மைக்ரோஸாஃப்டின் வீடியோ விளையாட்டு சாதனம் - 5 மில்லியன் தேடல்கள். மூன்றாவது இடம்: ஹாரி பாட்டர் - 4.8 மில்லியன் தேடல்கள். 'ஸ்டார் வார்ஸ்' - நான்காவது இடம், மற்றும், 'பார்பி' பொம்மைக்கு- ஐந்தாவது இடம்.

இந்த தகவலில் இருந்து இரண்டு விஷயங்கள் புலனாகிறது. ஒன்று : நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த பொருட்கள், எப்படி இத்தனை நபர்களிடம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பது. மேலும், எப்படி, குழந்தைகளை திருப்திப்படுதுவது (இந்த பரிசுப்பொருள் விஷயத்திலாவது) என்பது தலையாய தேடலாக அமைந்து விட்டது என்பதும். பெரியவர்களின் பொருட்கள் இந்த தேடல்களில் முந்தவில்லையே!

இரண்டாவது: எப்படி இத்தனை நபர்கள் இணையத்தில் தேடு தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும்தான். தங்களுக்கு தெரியாத விஷயங்களைப்பற்றி அறிவுத்தேடலுக்கு இந்த தேடு தளங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதும். தேடு தளங்கள் தேடித்தரும் இணைய தளங்களில் எந்த அளவு நம்பிக்கை வைக்கமுடியும் என்பதில் எந்த யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை. அதற்கான சான்றிதழ் ஏதையும் தேடு தளங்கள் வழங்குவதும் இல்லை. இருப்பினும் அதை தேடு தளங்களின் குறையாக யாரும் கருதவில்லை!
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு பொருளை தேடும்போது வேண்டுமென்றே தேடுதளம் அந்த பொருளைவிட விலை குறைவான மாற்றுப்பொருளை உங்களுக்கு காட்டலாம். இது நல்லதுதானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!. ஆனால் எந்த பொருளைக் காட்டுவது என்பதை, எந்த பொருளின் விற்பனையாளர் அந்த தேடு தளத்திற்கு, கையூட்டு ஏதும் (!) அளித்திருக்கிறார், என்ற அடிப்படையில் அமைந்தால் என்ன செய்வது!
திறந்த சந்தையில் இதெல்லாம் நடப்பது சர்வசாதாரணம்தான். நுகர்வோர்தான் தனக்கு வேண்டிய பொருளை கவனமான ஆராய்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

இது இப்படி இருக்க, தேடு தளங்களின் முக்கியத்துவம் அதிகரிக்க, நீங்களும் ஒரு தேடுதளம் தொடங்கலாமே!. வட்டார மக்களின் தேவை மற்றும் வட்டார மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், உங்களுக்கென்று ஒரு தொழில் உங்கள் கையில்!

Wednesday, December 14, 2005

லேப்டாப் வாங்கலையோ லேப்டாப்!

லேப்டாப் என்றழைக்கப்படும் மடிக்கணிணி இப்போது ரொம்ப பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. என்ன, விலைதான் சாமன்யாமானவர்களில் கைகளுக்கு எட்டாக்கனியாய் இருக்கிறது - முன்பைக்காட்டிலும் வெகுவாக விலை குறைந்திருந்தாலும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலோ லேப்டாப்பின் உபயோகம் பல்கிப்பெருகி வளர்ந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி செல்லும் ஒவ்வொருவரிடம் பெரும்பாலும் மடிக்கணிணி உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்...? சில ஆண்டுகளுக்கு முன் செல்போன் உபயோகமும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றோ செல்பேசி பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளது. அடுத்தது அதுபோல லேப்டாப் ?!?. கேட்க நன்றாக இருக்கிறது, நடக்குமா?

நடக்க வழி இருக்கிறது என்கிறது, 'One Laptop per Child (OLPC)' என்கிற என்.ஜி.ஓ நிறுவனம். 'Quanta Computer Inc', என்கிற தைவான் நிறுவனத்துடன் கூட்டாக,
U.S $100 க்கு, லேப்டாப் தயாரிக்க இருக்கிறார்களாம் - 2006 இன் அரை இறுதிக்குள். முதல் கட்டமாக 5 முதல் 15 மில்லியன் லேப்டாப்களை, ஏழு நாடுகளில் (சீனா, இந்தியா, பிரேசில், அர்ஜெண்டீனா, எகிப்து, நைஜீரியா, தாய்லாந்து) , அரசாங்கம் மூலமாக பள்ளிகளில் சோதனையில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

U.S $100 க்கு மடிக்கணிணி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? நல்ல திடமானதாக உருவாக்கப்பட உள்ள இந்த மடிக்கணிணிகள், லினக்ஸ்-இல் (அப்படி போடு அறுவாளை) இயங்குமாம்.

செய்தியின் மூலம்
மேலும்

Friday, December 09, 2005

அடடே, 'அடா'!

என்னதான் சொல்லறேன்னு பாக்கறீங்களா?
அதாங்க, அடா. 'அடா' அப்படீன்னு ஒரு கணிணி ஆணைத்தொடர் மொழி கேள்விப்பட்டு இருக்கீங்களா? பத்து வருடங்களுக்கு முன்னால், '95 வாக்கில், பிரபலமடையத்தொடங்கிய இந்த கணிணி மொழி, பின்னால், விமான கட்டுப்படுதல் போன்ற mission critical applications களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. பின்னாளில் C மற்றும் ஜாவா ஆகிய கணிணி மொழிகள் பிரபலமடைய, நம்ம 'அடா', 'அடடா'ன்னு சொல்லற நிலமைக்கு வந்துட்டார்.
10 வருஷம் Fast Forward பண்ணினா, இப்போ 2005 இல், அடா-2005 அப்படீன்னு புது version வெளியிடப் போறாங்களாம். போன பத்து ஆண்டுகளில், புதிய மாற்றங்கள் பலவற்றை கொண்டு வந்திருக்காங்களாம் - முக்கால்வாசி தன்னார்வம் கொண்டவர்களின் முயற்சியால்.

இத்தனை நாள் C மற்றும் ஜாவா என்னதான் பிரபலமான கணிணி மொழியாக இருந்தாலும் ( எனக்கும் வேறெந்த கணிணி மொழியும் தெரியாதுங்க!), Memory Management விஷயத்தில் இரண்டைக்காட்டிலும் 'அடா' நல்லவே செயல்படுமாம்.

கணிணி ஆணைத்தொடர் இலக்கணத்தில்் சில சில மாறுதல்களுக்கு வழிவிட்டதால், பெரிய அனுகூலன்களை காணமுடிகிறது என்கிறார்கள். என்னென்ன மாறுதல்கள் என்கிற விரிவான விளக்கங்களை அவர்களது இணைய தளத்தில் காணலாம்.

'அடடே, அடா' என்று சொல்ல வைப்பார்களா என்று பார்ப்போம்.