தாயகம் சென்று திரும்பியாயிற்று. பயணம் இனிதாகவும் பயனாகவும் இருந்தது. உடன் ஒரு மகிழ்சியான செய்தி. எனக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இல்லறம் நல்லறமாய், அன்பும் அறனும் நிறைந்ததாய் நிறைவேற தங்கள் வாழ்த்துக்களை பகிர்வீர்.
இரண்டே வாரமானதலால், சென்னையை விட்டு வேறூர் ஏதும் செல்லவில்லை. சென்னையில் முதல் வாரம் வெயில் தகித்தது. இரண்டாவது வாரமோ பெரிதும் மேகமூட்டமாய் இருக்க வெயிலின்்லின் கடுமை சற்றே தணிந்து இருந்தது. இன்னமும் குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.
சென்னையில் நாங்கள் வசிக்கும் அசோக் நகரில் காலையில் வாக்கிங் செல்வதற்காக நிறையபேர் அதிகாலையிலேயே எழுந்து தெருக்களில் வலம் வருவது ஆரோக்கியமான செய்தி. முதியவர்களும், பெண்களும், இளைஞர்களும் யாதொரு பாகுபாடில்லாமல் குடும்ப சகிதமாக நடந்து செல்வது இனிது. கூடவே அருகம்புல் சாறும், கீரையும் வாங்கக் கிடைக்கிறது.
சென்னையில் புதிதாக 'டெக்கான் க்ரானிகல்' என்ற தினசரி நாளிதழ் தனது சென்னைப் பதிப்பை துவக்கியிருக்கிறது. ஒரே ஒரு ரூபாய்க்கு கிடைப்பதால் பல வீடுகளில் இந்த நாளிதழுக்கு மாறி விட்டார்கள். 'டி.நகர் டாக்ஸ்', 'மாம்பலம் டைம்ஸ்' போன்ற இலவச உள்ளுர் குறும் இதழ்களும் பிரபலமாகியுள்ளன - தரமான கட்டுரைகளுடன் - ஒன்றே ஒன்று என்று இருந்தாலும்.
வீட்டில் 'லெண்டிங்' முறையில் அனைத்து பத்ரிக்கைகளும் வந்து போனாலும் அவற்றை படிக்க யாதொரு உற்சாகமும் இருக்கவில்லை. சில பத்ரிக்கைகளில், சில கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நபர்களால் பணம் கொடுத்து எழுதப்பட்டதாக தெரிந்தது. உதாரணத்திற்கு, நடிகை நமீதா பற்றிய கட்டுரை, ஒன்றுக்கும் மேற்பட்ட வார இதழில் ஒரே சமயத்தில்்!. மேலும் ஒவ்வொரு வார இதழிலும் ஒரு நடிகர் தன் சுய புராணத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார். மார்க்கெட் இழந்த நடிகர்களுக்குத்தான் வேலை இல்லை என்றால், படிப்பவர்களுக்கு கூடவா?. எப்படி, தொலைக்காட்சி நிகழ்சிகள் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்டதாக மாறிவிட்டதோ, அதுபோல பத்ரிக்கைகளும் மாறிக்கொண்டு இருக்கின்றன. கல்கி வார இதழின் தாள்தரமும் கணிசமாக குறைந்து இருந்தது. இன்னமும் ஜூ.வி, நக்கீரன் போன்ற இதழ்கள் பரபரப்பான செய்திகளை பதிப்பதிலும், தேவைப்பட்டால் அவற்றை தயாரிப்பதிலும் முனைப்பாய் இருக்கின்றன.
சுடோகு என்ற ஜப்பானிய எண்வரிசை விளையாட்டு சென்னையில் பிரபலமாகி உள்ளது. இளைஞர்கள் காலையில் பேப்பரும் பென்சிலும் கொண்டு அழித்து அழித்து கட்டங்களை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!. அதுபோல குழந்தைகளிடம் 'போகோ' என்கிற கார்ட்டூன் சேனல் பிரபலமாகி உள்ளது.
நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தக கடைக்கு சென்றிருந்தேன். வெளிநாட்டு பதிப்பக புத்தகங்கள் (உதாரணம் பெங்குவின் க்ளாசிக்ஸ்) வெளிநாடு விலையில் பாதி விலையில் கிடைக்கிறது! உதாரணத்திற்கு ஒரு 5$ புத்தகம் ருபாய் விலையில் 110. சி.டி க்களின் விலைகளில் சீரற்ற தன்மை உள்ளது. 65 ரூபாய் தொடங்கி 250 ரூபாய் வரை செல்கிறது. தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்வார்கள் போலும். ஆனால் ஒன்று - 65 ரூபாய்க்கே ஒரிஜினல் சி.டி கிடைத்தால், சி.டி. திருட்டுக்கள் குறையும். இப்போதெல்லாம் யாரும் ஒலி நாடா கேசட்டுக்களை வாங்குவதில்லை என நினைக்கிறேன். இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சி.டி. க்கள் நீண்ட காத்திருப்புக்குப்பின் வெளி வந்துவிட்டன.
சென்னையில் கிழக்கு கடற்கரைச்சாலை எவ்வளவு நன்றாக உள்ளது என்று போய்பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது - தினசரி நாளிதழ்களில் கொலை, கொள்ளை சம்பவங்களைப் படிக்கும் வரை. இரவு ஒன்பது மணிக்குமேல் இந்தச் சாலையில் கொலை, கொள்ளை மலிவோ மலிவாம்.
சென்னையில் இப்போதெல்லாம் தரமான வெளிநாட்டு உணவகங்களும் பிரபலமாகியுள்ளன. சீன, தாய் உணவகங்கள் சென்னையிலும் இருப்பது வியப்பைத் தருகிறது. மௌபரீஸ் சாலையில் 'பெண்ஜராங்' என்ற தாய் உணவகம் இதிலொன்று.
அமெரிக்க ஆப்பிள் வகைகள் கூட சாதாரண பழக்கடைகளில் கிடைக்கிறது - 'Produce of U.S.A' என்ற ஸ்டிக்கருடன். (எந்த அளவுக்கு உண்மையான ஸ்டிக்கர் என்பது வேறு் விஷயம்)
டி.கே பட்டம்மாள் அவர்களின் நினைவாக சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி வாணி மாஹாலில் நடந்தது, சென்றிருந்தேன். டி.எம். கிருஷ்ணா வாய்ப்பாட்டு. ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ்ராம் ம்ருதங்கம். கார்த்திக் கடம். டி.கே பட்டம்மாள் அவர்கள் இசை அமைத்த அரிய பாடல்களும் கேட்கக் கிடைத்தது.