திருவாவுக்கரசர் தேவாரம்
திரு அண்ணாமலைத் தலம்
வட்டனைம் மதி சூடியை வானவர்
சிட்டனைத் திரு வண்ணா மலையனை
இட்டனையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்டனை யடி யேன் மறந் துய்வனோ.
வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திரு வண்ணா மலையனை
ஏனனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆனனை யடி யேன்மறந் துய்வனோ.
மத்தனைம்மத யானை யுரித்தவெஞ்
சித்தனைத் திரு வண்ணா மலையனை
முத்தனைம் முனிந் தார்புர மூன்றெய்த
அத்தனை யடி யேன்மறந் துய்வனோ.
காற்றனைக் கலக்கும்வினை போயறத்
தேற்றனைத் திரு வண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடி யார்புர மூன்றெய்த
ஆற்றனையடி யேன்மறந் துய்வனோ.
மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத் திரு வண்ணா மலையனை
என்னனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்னனை யடி யேன்மறந் துய்வனோ.
மன்றனைம் மதி யாதவன் வேள்விமேல்
சென்றனைத் திரு வண்ணா மலையனை
வென்றனை வெகுண் டார்புர மூன்றையுங்
கொன்றனைக் கொடி யேன்மறந் துய்வனோ.
வீரனை விட முண்டனை விண்ணவர்
தீரனைத்
திரு வண்ணா மலையனை
ஊரனை
யுண ரார் புர மூன்றெய்த
ஆரனையடி யேன்மறந் துய்வனோ.
கருவினைக் கடல் வாய்விட முண்டவெம்
திருவினைத் திரு வண்ணா மலையனை
உருவினை யுண ரார்புர மூன்றெய்த
அருவினையடி யேன்மறந் துய்வனோ.
அருத்தனை யரவைந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திரு வண்ணா மலையனைக்
கருத்தனைக் கடி யார்புர மூன்றெய்த
அருத்தனை யடி யேன்மறந் துய்வனோ.
அரக்கனை யலற வ்விர லூன்றிய
திருத்தனைத்
திரு வண்ணா மலையனை
இரக்கமா
யென் உடலுறு நோய்களைத்
துரக்கனைத்
தொண்ட னேன்மறந் துய்வனோ.