Saturday, August 16, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (1)

1. இறுதியாக இங்காவது பார்ப்போமா இல்லை 
ஏமாற்றம் தான் அடைவோமா என்ற
ஏக்கத்துடனே அனுமனும் நுழைந்தான் அசோக வனம்.
அதுகாண் தேவரோ பூமாரி பொழிந்தனர்!
அதே அசோக வனத்தில் தான் அன்னை ஜானகியும்
அனேக அரக்கியர் சூழ மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
இரவாயினும் தூயிலுற நாட்டமில்லாமல் வாட்டத்தில் 
இராமனை எண்ணி வாடி இருந்தார்.

2. காணாததன் காரணம் என்னவோ?  என்னை வந்து
காணாததன் காரணம் என்னவோ?
இலங்கையில் சிறைவைத்ததை என்னவரும் அறியாரோ?
இராவணனை மறித்த ஜடாயுவும் மரித்தே போனாரோ?
என் நிலையை எடுத்து சொல்ல இனி யாரும் உளரோ?
மாரீசன் மாயம்தனை அறியாத பேதை இவள்
மானொன்று பிடித்துவர மனாளனைப்போய் அனுபிப்பினேனே.
என்னவரின் இளையோனையும் விரட்டினேனே.
என்னையும் அதனால் வெறுத்துப் போனாரோ?
வஞ்சனை அரக்கரும் என்னை விட்டுவைக்காமல் 
தின்றே தீர்த்திருப்பார் என்றே விட்டு விட்டாரோ?
ஒருவேளை பரதனும் காட்டுக்கு வந்து
மறுபடி நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ?
வேறு அசுரர்களோடு தான் போர் ஏற்பட்டு விட்டதோ?
வில்லொன்றை ஒரு நொடியில் உடைத்த பெருமான்
சொல்லொன்று உதிர்க்கும் நேரத்திற்குள்
வந்து என்னைக் காணாததன் காரணம் என்னவோ?

3. இனி பரதனே நாட்டை ஆள வேண்டும் 
என்று கைகேயி அன்னை சொன்ன போதும்
முன்னை விட மும்மடங்கு முகப்பொலிவு கொண்ட
என்னவரின் முகத்தை இனி எப்போது காண்பேன்?
வனம்போய்வா என்று சொன்னபொதும் 
அன்றலர்ந்த செந்தாமரை போல் மலர்ந்த முகத்தை 
இனி எப்போது காண்பேன்?

4. அன்று தந்தை ஜனகன் தனது கைகளை
அவரது கைகளில் ஒப்படைக்க,
அவர் என் பாதத்தைப் பற்றி
ஒன்பது முறை எடுத்து வைத்தாரோ!
பொன்முடி தரிக்க வேண்டிய
பரதனும் அவரது அன்பினால்
மரவுரி தரித்து கானகம் வந்தாரே!
கங்கைக் கரையில் குகனைத் தோழனாக்கி
அவனுக்கு இலக்குவனை தம்பியாக்கி
என்னை அவனுக்கு கொழுந்தியாயும் ஆக்கினாரே!
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைக் காட்ட
அன்று புல்லால் காக்கைக்கு கண் போகச் செய்தாரே!

5. அன்னையை சுற்றி இருந்த
அரக்கியர் அனைவரும் உறங்குகின்றனர்.
ஒருத்தி தவிர - அவள் பெயர் திரிசடை.
அவள் இன்சொல்லாள். அன்பு மொழி கூறி
அன்னைக்கு ஆறுதலாய் இருந்தாள்.
அன்னை ஜானகி அவளிடம் துடிக்கும்
தன் இடக்கண்ணைக் காட்டி சகுனம்
நன்மையோ தீமையோ நிகழப்போவது 
என்னவோ ஏதோ எனும் 
தன் கவலையைப் பகிர்ந்தாள்.
வேண்டாம் கவலை சீதையே நல் நிமித்தம் 
என்றே ஆறுதல் மொழிந்தாள் அன்பின் திரிசடை.

6. அச்சமயத்தில் அனுமன் சீதை இருக்கும் இடத்தை
அடைந்தான், அதே சமயம் உரக்கம்
கலைந்த அரக்கியரும் எழுந்தனர்.
ஆலமே உருவமாய் அமைந்த அரக்கியரின்
கொடூரத்தைக் காண அழுகையே வந்தது அன்னைக்கு,
இதையெல்லாம் மரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து
பார்த்த அனுமனுக்கு இதுதான் அன்னை ஜானகி
என்பது தீர்மானமாயிற்று.

7.
இங்கங்கெனாதபடி எங்கும் தேடிப்பின்
கண்டேன் கண்டேன் என்றே மட்டற்ற மகிழ்ச்சியில்
கரைபுரண்டு ஆடினான் பாடினான்.
உவகைத் தேனை உண்ட மகிழ்சியில்
அனுமன் ஆனந்தக் கூத்தாடினான்.

3 comments:

  1. வணக்கம்
    அருமையாக எழுதியுள்ளீர்கள் படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுகிறது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கு நன்றிகள் திரு.ரூபன்!

      Delete