Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.

13 comments:

  1. சரியான நேரத்தில் அருமையான ஆராய்ச்சி. முடிவுகள் விந்தை!

    ReplyDelete
  2. சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர வட இந்தியர்களுமல்ல, ஆரியர்களுமல்ல.விஜயன், வங்காளம், குஜராத் எல்லாமே வெறும் கட்டுக் கதைகள். சிங்களவர்களே இவற்றை நம்புவதில்லை.

    முதலில் விக்கிப்பீடியா கட்டுரைகளை நம்புவதே அபத்தம். விக்கிப்பீடியாவில் யாரும் தமது விருப்பத்திற்கேற்ப கட்டுரைகளைப் பதிவு செய்யலாம். இலங்கை அரசே இப்படியான கட்டுரைகளை திட்டமிட்டு வெளியிடுவதுமுண்டு. அவர்கள் ஆதாரமாகக் குறிப்பிடும் இணைப்புகளையும், நூல்களைப் பார்த்தால் அங்கு ஒன்றுமே இருக்காது. மேலோட்டமாக மட்டும் ஏதாவது குறிப்பிட்டிருக்கும். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவிருப்பதால் அதற்குப் போட்டியாக , வடக்கில் சிங்களவர்களுக்கு தொடர்பிருப்பதாகக் காட்டும் கட்டுரைகளையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது இலங்கை அரசின் வழக்கம். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

    மரபணுக்கள் (DNA )மூலமாக இக்கால மொழி, இனத் தொடர்புகளை வரையறுப்பதும், அதனடிப்படையில் கூட்டுச் சேர்வதும் வெறும் முட்டாள்தனம். உதாரணமாக தமிழ்நாட்டில் வாழும் சில தமிழர்களுக்கும் (குறிப்பாக இருளர்களுக்கும்) ஆபிரிக்க நீக்ரோக்களுக்கும் DNA மூலமாக நெருங்கிய தொடர்புண்டு, அந்த வகையில் தமிழர்கள்/இருளர்கள் எல்லாம் நீக்ரோக்கள் என்றும் கூட வாதாட முடியும். அதனால் கருணாநிதிக்கும், நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு என்று கூடப் பதிவு போடலாம். :-)


    -சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர ஆரியர்களல்ல.-

    http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post.html

    ReplyDelete
  3. >>அதனால் கருணாநிதிக்கும், நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு என்று கூடப் பதிவு போடலாம். :-)<< அவசியம் ;-(

    அந்த விக்கிபீடியா சுட்டி எதோ ஆதரமில்லாமல் எழுதப்பட்ட கட்டுரையல்ல, முழுக்க முழுக்க ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

    ReplyDelete
  4. //அந்த விக்கிபீடியா சுட்டி எதோ ஆதரமில்லாமல் எழுதப்பட்ட கட்டுரையல்ல, முழுக்க முழுக்க ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.//

    அந்தக் கட்டுரையைப் போன்றே அதே மரபணுக்களின் அடிப்படையில் 'தமிழராகிய வெங்கட்ராமனுக்கும் நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு' என்று கூடப் பதிவு போடலாம் என்பது தான் எனது கருத்தாகும். :-)

    ReplyDelete
  5. மரபணு ஆராய்சிகள் தமிழர்களை ஆப்ரிக்க இனத்தவருடன் தான் பெரிதும் (மற்ற இனங்களைக் காட்டிலும்), இணைப்பதல், "தொடர்பு" என்று சொல்ல வரும்போது, அதில் ஒன்றும் முரண் இருப்பதாகத் தெரியவில்லை.


    ReplyDelete
  6. மேலும், தமிழர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான தொடர்பு, ஆப்ரிகாவில் கேமரூன் நாட்டில் வசிக்கும் பழங்குடியினர் பேசும் மொழியிலும் தமிழ் இருப்பது - இவர்களுக்கான தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

    மேலும் விவரங்களுக்கு இந்த யூட்யூப் படத்தைப் பார்க்கவும்:
    https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk

    ReplyDelete
    Replies
    1. //மேலும் விவரங்களுக்கு இந்த யூட்யூப் படத்தைப் பார்க்கவும்:
      https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk///

      இதை நான் எப்பவோ பார்த்து விட்டேன். ஆனால் கமரூனில் பேசும் மொழி தமிழ்ச் சொற்கள் போல ஒலிப்பதற்கு காரணம் மரபணுக்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் காணொளியை உருவாக்கியவர்களின் நோக்கம் கூட அதுவாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இந்தக் காணொளியில் கூட ஊகங்கள் தான் அதிகம். பண்டைத் தமிழகத்துக்கும் கமரூன் போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா அவுஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இணைந்திருந்து பிரிந்தவை என்ற கருத்துக்கு இப்படியான ஆதாரங்கள் வலுச் சேர்க்கலாம், அவ்வளவு தான்.

      Delete
    2. >>இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா அவுஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இணைந்திருந்து பிரிந்தவை என்ற கருத்துக்கு இப்படியான ஆதாரங்கள் வலுச் சேர்க்கலாம், அவ்வளவு தான். <<

      மரபணுத் தொடர்புகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன எனபது என் கருத்து.

      Delete
  7. தமிழர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் மட்டுமல்ல, ஆபிரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் கூட மரபணுக்கள் மூலமான தொடர்புண்டு. அதனால் குயீன் எலிசபெத்துக்கும் சக்கா சூலுவுக்குமான பழங்காலத் தொடர்பென்று பதிவு போட முடியுமா? என்னுடைய கருத்து என்னவென்றால் மரபணுக்கள் மூலம் தொடர்பின் அடிப்படையில் பார்த்தால் உலகிலுள்ள எல்லா இனக்குழுவினரும் ஆபிரிக்கர்களே என்றும் வாதாட முடியும். நான் கூறுவதென்னவென்றால் மரபணு தொடர்பு மூலம் இக்கால, இன, மொழிக்குழுக்களுக்கிடையே ஒரு தொடர்பை, பந்தத்தை, நட்பை, அல்லது அந்த அடிப்படையில் ஒருவகையான Kinship ஐ ஏற்படுத்த முனைவது அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வது வேடிக்கையானது என்பது தானே தவிர அப்படி எந்தவித மரபணு தொடர்பும் வெவ்வேறு இனக்குழுக்களுக்கிடையே இல்லை என்பதல்ல.


    விக்கிப்பீடியாவில் African admixture in Europe பற்றியும் கட்டுரைகள் உண்டு. :-)

    http://en.wikipedia.org/wiki/African_admixture_in_Europe

    ReplyDelete
  8. எல்லா இனத்திலும் மற்ற எல்லா இனத்தின் மரபணுத் தாக்கம் இருக்கத்தான் செய்யும் - ஆனால் "பெரிதும்" எவை பெரிய தாக்கத்தைத் தருகிறது என்பதைக் கொண்டு ஓரளவிற்கு - காலம் காலமாக எந்த இனம் எந்த இனத்தோடு பெரிதும் நெருக்கமான உறவுகளில் இருந்திருக்கிறார்கள் என்பதை - இவ்வறிவியல் சான்றுகளோடு நிறுவலாம்.

    மற்றபடி இவைமூலம் புதிதான நட்பை/பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது வாடிக்கையே!

    ReplyDelete
  9. சுவரசியமான தகவல்.

    //மற்றபடி இவைமூலம் புதிதான நட்பை/பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது வாடிக்கையே! //
    மிகவும் சரியாக சென்னீங்க சார்.
    ஒரே பிரதேசத்தில் வாழும்போது இந்தியன் என்று இழிவாக ஒதுக்கியவங்க தங்க கடைந்தெடுத்த சுயநலத்திற்காக பின்பு தொப்பிள் கொடி தமிழக உறவுகளே என்று சொந்தம் கொண்டாடுவாங்க :)

    ReplyDelete
  10. மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னால் இங்கு வந்தால் எத்தனை அருமையான வாசிப்பனுபவத்தை இழந்திருக்கிறேன் என்று புரிகிறது...

    ReplyDelete