Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.